பாக்.கில் வேட்பாளர் மீது தற்கொலை படை தாக்குதல்: 3 பேர் பலி

தினகரன்  தினகரன்
பாக்.கில் வேட்பாளர் மீது தற்கொலை படை தாக்குதல்: 3 பேர் பலி

பெஷாவர்: பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் வேட்பாளர் உட்பட 3 பேர் கொல்லப்பட்டனர்.  பாகிஸ்தானில் நாளை மறுதினம் பொதுத்தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலை சீர்குலைப்பதற்காக பல்வேறு தீவிரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. குறிப்பாக, பல்வேறு கட்சி வேட்பாளர்களை குறிவைத்து தற்கொலை படை தாக்குதல் நடத்தப்படுகிறது. ஏற்கனவே நடத்தப்பட்ட பல தாக்குதல்களில், வேட்பாளர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி வேட்பாளர் இக்ரமுல்லா கந்தாபூர் மீது தீவிரவாதிகள் நேற்று தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர்.  பிகே-99 தொகுதியில் போட்டியிடும் இவர், பிரசாரத்திற்காக சென்றபோது தேரா இஸ்மாயில்கான் பகுதியில் வாகனத்தை இடைமறித்து தீவிரவாதி ஒருவன் மனித வெடிகுண்டாக மாறி  தாக்குதல் நடத்தினான். இதில் படுகாயமடைந்த இக்ரமுல்லா,  ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த தாக்குதலில் அவருடன் சென்ற 2 பேரும் பலியாகினர். பெஷாவர் மாகாணத்தில் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி ஆட்சி செய்தபோது, இக்ரமுல்லா விவசாய அமைச்சராக இருந்தார். சட்ட அமைச்சராக இருந்த இவருடைய சகோதரர் இஸ்ராருல்லா கந்தாபூர், தற்கொலைப் படை தாக்குதலில் கொல்லப்பட்டார். இதையடுத்து, தேரா இஸ்மாயில் கானில் நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று இக்ரமுல்லா அமைச்சரானார்.

மூலக்கதை