நாடு முழுவதும் 3-வது நாளாக போராட்டம் நீடிப்பு லாரிகள் வேலைநிறுத்தம் தீவிரம் அடைகிறது

PARIS TAMIL  PARIS TAMIL
நாடு முழுவதும் 3வது நாளாக போராட்டம் நீடிப்பு லாரிகள் வேலைநிறுத்தம் தீவிரம் அடைகிறது

பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். சுங்கச்சாவடிக்களை அகற்றிவிட்டு ஆண்டுக்கு ஒரு முறை சுங்கக்கட்டணம் வசூலிக்க வேண்டும். 3-ம் நபர் காப்பீடு கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்ற 3 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரசில் அங்கம் வகிக்கும் லாரி உரிமையாளர்கள் கடந்த 20-ந் தேதி முதல் இந்த போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனமும் (தமிழ்நாடு) ஆதரவு தெரிவித்துள்ளது. வேலைநிறுத்தத்தில் பங்கேற்காத தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனத்தின் லாரிகள் வழக்கம் போல் இயங்கி வருகின்றன.

இந்த வேலைநிறுத்தம் தீவிரம் அடைந்து உள்ளது. நேற்று 3-வது நாளாக லாரிகள் ஓடவில்லை. பெரும்பாலான லாரிகள் இயக்கப்படாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக விவசாய விளை பொருட்களை அரசு பஸ்களில் கட்டணம் இன்றி ஏற்றிச்செல்ல அனுமதி அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு இருக்கிறார்.

இந்த வேலைநிறுத்தம் குறித்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் (தமிழ்நாடு) தலைவர் எம்.ஆர்.குமாரசாமி கூறியதாவது:-

லாரி உரிமையாளர்கள் போராட்டம் தீவிரமடைந்து உள்ளது. நாடு முழுவதும் 75 லட்சம் லாரிகளும், தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகளும் ஓடவில்லை. பால், மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகளை தவிர மற்ற லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு உள்ளன. சரக்கு முனையங்களும் மூடப்பட்டு வருகின்றன.

பெட்ரோல் விற்பனை நிலையங்களில் 80 சதவீதம் டீசல் நிரப்புவது லாரிகள்தான். தற்போது லாரிகள் ஓடாததால் டீசல் நிரப்புவது இல்லை. எனவே பெரும்பாலான பெட்ரோல்-டீசல் லாரிகளுக்கும் வேலை இல்லாமல் நிறுத்தப்பட்டு வருகின்றன.

லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக சுங்கக்கட்டணம், காப்பீடு கட்டணம் போன்றவற்றின் மூலம் மத்திய அரசுக்கு கிடைக்க வேண்டிய ரூ.5 ஆயிரம் கோடி இழப்பாக அமைந்துள்ளது. லாரி உரிமையாளர்களுக்கும் தினசரி ரூ.200 கோடி இழப்பு ஏற்படுகிறது. நேரடியாகவும், மறைமுகமாகவும் 20 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

வருகிற நாட்களில் உணவுப் பொருட்கள், கட்டுமான பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலைவாசி உயரக்கூடும். எனவே மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் பேச்சுவார்த்தைக்கு அழைத்து சுமுக தீர்வு காண வேண்டும். சுங்கக் கட்டணம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு பொதுமக்களை பாதிக்கிறது. எனவே அவர்களுக்காகவும் சேர்த்து நாங்கள் போராடி வருகிறோம். எனவே பொதுமக்களும் எங்களுடைய போராட்டத்துக்கு ஆதரவும், ஒத்துழைப்பும் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

லாரி உரிமையாளர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், சென்னையை அடுத்த வானகரத்தில் லாரிகள் மீது கருப்புகொடியை ஏற்றி உள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எஸ்.யுவராஜ் நிருபர்களிடம் கூறுகையில், லாரி உரிமையாளர்களை மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதால் லாரிகளில் கருப்பு கொடி ஏற்றி தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து இருப்பதாகவும், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் சென்னை புதுப்பேட்டை மின்வாரிய அலுவலகம் அருகே இன்று (திங்கட்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாகவும் கூறினார்.

தமிழ்நாடு உணவு எண்ணெய் டேங்கர் லாரி உரிமையாளர்கள் நல சங்க செயலாளர் டி.ஜானகிராமன் கூறுகையில், “லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் எங்கள் சங்கமும் பங்கேற்கிறது. இப்போராட்டம் காரணமாக தமிழகத்தில் 450-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் ஓடாது. இதனால் தமிழகத்தில் மட்டும் 2 ஆயிரம் தொழிலாளர்கள் நேரடியாக பாதிக்கப்படுவார்கள். இந்தியா முழுவதும் 15 ஆயிரம் டேங்கர் லாரிகள் போராட்டத்தில் பங்கேற்கின்றன. இந்த போராட்டத்தால் தமிழகத்தில் உணவு எண்ணெய் தட்டுப்பாடு நிச்சயம் ஏற்படும். எனவே, அரசு பேச்சுவார்த்தை மூலம் ஒரு நல்ல தீர்வை எங்களுக்கு வழங்கவேண்டும்” என்றார்.

சென்னை பெட்ரோலியம் டேங்கர் லாரி நலச் சங்க செயலாளர் நாசர் கூறுகையில், “லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தங்கள் சங்கம் பங்கேற்பதாகவும், வேலைநிறுத்தத்தில் பங்கேற்பது குறித்து அந்த போராட்ட களத்தில்தான் முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையே தி.மு.க. செயல்தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆண்டுக்கு ஒருமுறை சுங்கக் கட்டணம் வசூலித்து விட்டு, சுங்கச்சாவடிகளை அகற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள். பொதுமக்களின் கோரிக்கையும் இது தான். எனவே, மத்திய அரசு உடனடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சுமுக தீர்வு காண வேண்டும்” என்று தெரிவித்து உள்ளார்.

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் முபாரக் ஆகியோரும் இதேபோல் வலியுறுத்தி உள்ளனர்.

மூலக்கதை