சந்திரபாபு நாயுடு தலைமையில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள 3-வது அணி அமைய வேண்டும்

PARIS TAMIL  PARIS TAMIL
சந்திரபாபு நாயுடு தலைமையில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள 3வது அணி அமைய வேண்டும்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட மற்றும் தொகுதி செயலாளர்கள் கூட்டம் சென்னை தியாகராயநகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கட்சியின் நிறுவனர் தலைவர் ஆர்.சரத்குமார் தலைமை தாங்கினார். பொருளாளர் ஏ.என்.சுந்தரசேன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், சென்னை- சேலம் 8 வழிச்சாலையால் விவசாயிகள், தொழிலாளர்கள் உள்பட எவரும் பாதிக்காத வகையில் உயர்த்தப்பட்ட சாலையாக அமைக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த ஜி.எஸ்.டி. வரம்புக்குள் அதனை கொண்டு வர வேண்டும். சுங்கச்சாவடிக்கு ஆண்டுக்கு ஒருமுறை கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் ஆர்.சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:- நாடாளுமன்றத்துடன், சட்டசபைக்கும் தேர்தல் நடத்துவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. எனினும் எப்போது தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க கட்சியை தயார்படுத்துவதுடன், ஆகஸ்டு 31-ந் தேதி கட்சியின் 12-ம் ஆண்டு தொடக்க விழாவில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 150 வேட்பாளர்களின் பெயர்களை அறிவிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு நாட்கள் அதிகம் இருப்பதால் இன்னும் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படவில்லை. சூழலுக்கு ஏற்ப முடிவெடுக்கப்படும். தனித்து போட்டியிட்டாலும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறோம். நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையில் 3-வது அணி உருவாக வேண்டும் என்பதே எனது கருத்து. இதற்காக கேரளா, கர்நாடகா, தெலுங்கானா முதல்-மந்திரிகள் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசுவேன்.

மத்திய அரசு மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி சிறப்பாக பேசினார். ஆனால் பிரதமர் நரேந்திர மோடியை கட்டிப்பிடித்தது தவறு. நாடாளுமன்ற விதிகளுக்கு புறம்பாக கண் அடித்தது, கட்டிப்பிடித்தது போன்றவற்றை தவிர்த்து இருக்கலாம்.

சேலம் 8 வழிச்சாலை தொடர்பாக எங்கள் கட்சி நிர்வாகிகள் சேலம், திருவண்ணாமலை, காஞ்சீபுரம் மாவட்ட மக்களை சந்தித்து கருத்துகளை கேட்டனர். யாரையும் பாதிக்காத வகையில் உயர்த்தப்பட்ட பாதை அமைக்கலாம். ‘நீட்’ தேர்வு விஷயத்தில் தமிழக அரசு தான் முடிவு செய்ய வேண்டும். நல்ல முடிவு எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

வருமானவரி சோதனை விதிகளுக்கு உட்பட்டு தான் நடக்கும். வருமானத்துக்கு அதிகமாக சொத்து வைத்திருந்தால் தவறு என்பதை அனைவரும் உணர வேண்டும். சோதனை முடிவதற்கு முன்பாக கருத்து கூறுவதை தவிர்க்க வேண்டும். சட்டம் ஒழுங்கு நன்றாக தான் இருக்கிறது. தூத்துக்குடி சம்பவம் தான் சற்று நெருடலை அளிக்கிறது.

பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். குறிப்பாக சென்னையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும். ஜி.எஸ்.டி. வரம்புக்குள் பெட்ரோலிய பொருட்களை கொண்டு வந்தால் தான் விலையை கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக துணை பொதுச்செயலாளர் சேவியர் வரவேற்றார். கூட்டத்தில் முதன்மை துணை பொதுச்செயலாளர்கள் என்.என்.சண்முகசுந்தரம், எஸ்.வி.கணேசன், துணை பொதுச்செயலாளர்கள் என்.எம்.எஸ்.விவேகானந்தன், மகளிர் அணி துணை செயலாளர் எம்.பாகீரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மூலக்கதை