கவர்னருடன் மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு வருமான வரி சோதனை தொடர்பாக புகார் மனு அளிக்கிறார்

PARIS TAMIL  PARIS TAMIL
கவர்னருடன் மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு வருமான வரி சோதனை தொடர்பாக புகார் மனு அளிக்கிறார்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த நெடுஞ்சாலைத்துறை காண்டிராக்டர் செய்யாத்துரையின் வீடு, அலுவலகங்கள் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் 5 நாட்கள் நடைபெற்ற வருமான வரி சோதனையில் ரூ.170 கோடி ரொக்கப் பணம், 105 கிலோ தங்கக் கட்டிகள் சிக்கியதாக கூறப்படுகிறது.

இதில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் சம்பந்தப்பட்டிருப்பதாக, தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். அதே நேரத்தில், மத்திய அரசும் ஏதோ திட்டமிட்டு இந்த சோதனையை நடத்தியிருப்பதாகவும் புகார் கூறினார்.

இந்த நிலையில், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேச இருக்கிறார். அவருடன் தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன், முன்னாள் மத்திய மந்திரி அ.ராசா, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் உடன் செல்கின்றனர்.

இந்த சந்திப்பின்போது, மு.க.ஸ்டாலின் கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம் புகார் மனு ஒன்றையும் அளிக்க இருக்கிறார். அதில், சமீபத்தில் நடந்த வருமான வரிச் சோதனையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவரது உறவினர்களுக்கு சம்பந்தம் இருப்பதாகவும், சோதனையோடு இதை விட்டுவிடாமல், உடனடியாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்துமாரும் கோரிக்கை விடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், வருமான வரிச் சோதனை தொடர்பாக, நீதிமன்றத்தை நாடவும் தி.மு.க. திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக, கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதியும், ஏப்ரல் மாதம் 13-ந் தேதியும் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை