ராஜஸ்தானில் ருசிகரம் பாதியில் விட்ட பள்ளி படிப்பை 59 வயதில் தொடர்ந்த எம்எல்ஏ

தினகரன்  தினகரன்
ராஜஸ்தானில் ருசிகரம் பாதியில் விட்ட பள்ளி படிப்பை 59 வயதில் தொடர்ந்த எம்எல்ஏ

ஜெய்ப்பூர்: பாதியில் விட்ட பள்ளிப் படிப்பை தனது மகள்களுடன் சேர்ந்து படித்து, தற்போது பிஏ தேர்வு எழுதியிருக்கும் 59 வயது ராஜஸ்தான் எம்எல்ஏ பூல் சிங் மீனா பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் கிராமப் பகுதியில் இருந்து எம்எல்ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பூல் சிங் மீனா (59). இவர் கிராமப்புறங்களில் பெண்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார். விழிப்புணர்வு பிரசாரத்தில் மீனா தனது வாழ்க்கை சம்பவங்கள் குறித்து கூறியதாவது: எனது தந்தை காலமானதைத் தொடர்ந்து, குடும்ப பாரம் என் மீது விழுந்ததால், 7ம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விட்டேன். அதன்பின், படிப்படியாக வளர்ந்து எம்எல்ஏ ஆனேன். மற்றவர்களின் படிப்புக்காக பல்வேறு உதவிகளை செய்த போதிலும், நான் படிக்கவில்லையே என்ற வலி எனக்குள் இருந்தது. அதை தெரிந்து கொண்ட என் 4 மகள்களும் மீண்டும் பள்ளிப்படிப்பை தொடர என்னை உற்சாகப்படுத்தி நம்பிக்கை தந்தனர். அவர்களுடன் சேர்ந்து மீண்டும் படித்தேன். 2013ல் முயற்சியை தொடங்கினாலும், எம்எல்ஏ பணி காரணமாக, 2016ல் 10ம் வகுப்பு தேர்வை எழுதி பாஸ் செய்தேன். 2016-17ல் பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்றேன். தற்போது பிஏ பட்டப்படிப்பு முதலாண்டு தேர்வை எழுதி உள்ளேன். அதே நேரத்தில், பிரதமரின் பெண் குழந்தைகளை காப்போம் திட்டத்தின் கீழ், கிராமப்புற சிறுமிகள் கல்வி அறிவு பெற உதவி செய்து வருகிறேன். எனது தனி தொகுதியில் 10, 12ம் வகுப்பில் 80 சதவீத மதிப்பெண் எடுக்கும் எஸ்சி, எஸ்டி பிரிவு மாணவிகளை ஜெய்ப்பூருக்கு விமானத்தில் அழைத்துச் செல்வதாக புதிய திட்டத்தை அறிவித்தேன். அதன்படி 2016ல் 2 பேர் தேர்வானார்கள். 2017ல் 6 பேர் தேர்வானார்கள். தற்போது, எந்த பிரிவை சேர்ந்தவர்களாக இருந்தாலும் 80 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றால் ஜெய்ப்பூருக்கு விமானத்தில் அழைத்துச் செல்வதாக உறுதி அளித்துள்ளேன். இது கிராமப்புற சிறுமிகளுக்கு கல்வி மீதான ஆர்வத்தை மேலும் அதிகரிக்கும். மக்கள் பிரதிநிதிகள் கல்வி அறிவு பெற்றவர்களாக இருந்தால்தான் படிப்பு விஷயத்தில் மற்றவர்களை ஊக்கப்படுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை