நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி முடிவெடுக்க ராகுல் காந்திக்கு முழு அதிகாரம் : காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் முடிவு

தினகரன்  தினகரன்
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி முடிவெடுக்க ராகுல் காந்திக்கு முழு அதிகாரம் : காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் முடிவு

புதுடெல்லி : நாடாளுமன்ற தேர்தலில் பாஜ.வை எதிர்க்கும் கட்சிகளை ஒன்றிணைக்கவும், கூட்டணி அமைப்பது பற்றிய முடிவுகளை எடுக்கவும் ராகுல் காந்திக்கு காங்கிரஸ் செயற்குழு முழு அதிகாரம் அளித்துள்ளது. காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி கடந்தாண்டு டிசம்பரில் பொறுப்பேற்றார். அதன் பிறகு, காங்கிரஸ் செயற்குழுவை அவர், கடந்த சில நாட்களுக்கு முன்  மாற்றியமைத்து விரிவுப்படுத்தினார். இதில் 23 உறுப்பினர்கள், 19 நிரந்தர அழைப்பாளர்கள், 9 சிறப்பு அழைப்பாளர்கள் சேர்க்கப்பட்டனர். இதன் முதல் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. நாடாளுமன்றத்தில் மோடி அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்த இரண்டு நாட்களுக்கு பிறகு இந்த கூட்டம் கூடியது. நம்பிக்கையில்லா தீரமானத்தின் மீதான விவாதத்தில் ராகுல் ஆற்றிய உரை, உலக அரசியல் அரங்கில் அவருக்கு மிகப்பெரிய புகழை தேடிக் கொடுத்துள்ளது. தனது பேச்சில் பாஜ.வையும், பிரதமர் மோடியையும் அவர் நேரடியாக விமர்சித்தார். அதோடு பேசி முடித்தபின், தன் மனதில் மோடிக்கு இடம் உள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புவதாக கூறி, நேராக பிரதமர் மோடி இருந்த இருக்கைக்கு சென்று அவரை கட்டிப்பிடித்து அதிர்ச்சி அளித்ததும், காங்கிரஸ் வட்டாரத்தில் மேல்மட்டம் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரையில் உற்சாகத்தை அளித்துள்ளது. நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்துக்கு பதிலளித்து மோடி பேசியபோது, ராகுலின் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் விரிவான பதிலளித்தார். மோடி தனது பதிலுரையில், ‘‘என்னை பிரதமர் நாற்காலியில் இருந்து வெளியேற்ற ராகுல் முயற்சிக்கிறார்’’ என குற்றம்சாட்டினார். இதையும் ராகுலின் பேச்சுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக காங்கிரஸ் பார்க்கிறது. நேற்று நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்திலும் இந்த உற்சாகம் பிரதிபலித்தது. கூட்டத்தில் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், பல்வேறு  மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி.க்கள், எம்எல்ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் பேசிய ராகுல், ‘‘இந்த புதிய செயற்குழு, அனுபவமும், சக்தியும் இணைந்த அமைப்பு. இது கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்க்காலத்தை இணைக்கும் பாலமாக செயல்படும். அரசு அமைப்புகள், தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் ஏழைகள் மீது பா.ஜ தாக்குதல் நடத்துகிறது. எனவே, இந்தியாவின் குரலாக காங்கிரஸ் செயல்பட வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக காங்கிரஸ் தொண்டர்கள் போராட வேண்டும்’’ என்றார்.  ஐமு கூட்டணி தலைவர் சோனியா காந்தி பேசுகையில், ‘‘இந்தியாவின் ஏழை மக்கள் அச்சம் மற்றும் நம்பிக்கையற்ற சூழலில் வாழ்கின்றனர். பிரதமர் மோடியின் தற்போதைய பேச்சு, அவரது நம்பிக்கையின்மையை காட்டுகிறது. மோடி அரசு கவிழும் நேரம் தொடங்கி விட்டது. நாம் கூட்டணியை அமைத்து ஒன்றாக செயல்பட வேண்டும். இந்த முயற்சியில் நாம் காங்கிரஸ் தலைவருக்கு துணை நிற்கிறோம். நாட்டின் ஜனநாயகத்தை சமரசம் செய்யும் ஆபத்தான ஆட்சியில் இருந்து மக்களை மீட்க வேண்டும்’’ என்றார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், ‘‘நாட்டின் சமூக நல்லிணக்கம், பொருளாதார வளர்ச்சியை மீட்கும் கடுமையான பணியில் காங்கிரஸ் கட்சியினர் ராகுலுக்கு உறுதுணையாக இருப்பார்கள் என உறுதியளிக்கிறேன். விவசாயிகளின் வருவாயை 2022ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்கப்படும் என பா.ஜ கூறுகிறது. இதற்கு 14 சதவீத வளர்ச்சி ஏற்பட வேண்டும். ஆனால், அதற்கான சாத்தியக்கூறு கண்ணுக்குகெட்டிய தூரம் வரை தெரியவில்லை. அது இப்போதைக்கு சாத்தியமல்ல. வளர்ச்சியை ஏற்படுத்தும் கொள்கை திட்டங்களுக்கு பதில், தற்பெருமை மற்றும் பொய்களை கூறும் கலாசாரத்தை இந்த அரசு வளர்க்கிறது’’ என்றார். இக்கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் பேசினர்.  ‘‘பாஜ.வுக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைத்து, அடுத்த மக்களவை தேர்தலுக்கான பலமான கூட்டணியை அமைக்கும் முக்கிய பணியை காங்கிரஸ் எடுக்க வேண்டும். இந்த கூட்டணியை வழிநடத்த வேண்டும்’’ என 35 முதல் 40 தலைவர்கள் வலியுறுத்தினர். முக்கிய எதிர்க்கட்சி தலைவராக ராகுல் இருப்பதால், அவரே தேசிய கூட்டணியையும் வழிநடத்த வேண்டும் என சில தலைவர்கள் வலியுறுத்தினர். கூட்டத்தின் முடிவில், அடுத்த மக்களவை தேர்தலில் பாஜ.வை எதிர்க்கும் கட்சிகளை ஒன்றிணைக்கவும், கூட்டணி பற்றி முடிவுகளை எடுக்கும் முழு அதிகாரத்தையும் ராகுலுக்கு செயற்குழு வழங்கியது. மேலும், பல்வேறு தேசிய மற்றும் மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழுவை அமைக்கும் அதிகாரத்தையும் ராகுலுக்கு செயற்குழு வழங்கியது. தற்கொலை படையாக செயல்பட காங். முடிவுகாங்கிரஸ் செயற்குழு கூட்டம் குறித்து பாஜ செய்தி தொடர்பாளர் சம்பிட் பத்ரா  கூறுகையில், ‘‘காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தின் முடிவை இரண்டு வரிகளில்  கூறலாம். ‘நாங்கள் வெற்றி பெற விரும்பவில்லை. ஆனால், மோடி மீண்டும்  ஆட்சிக்கு வருவதை தடுக்க வேண்டும்’ என்பதுதான் அது. ஒரு பக்கம் நேர்மறையான  அரசியலை நடத்தி, நாட்டை வளர்ச்சி பாதைக்கு மோடி கொண்டு செல்கிறார்.  மறுபுறம் ராகுல் தலைமையில், எதிர்மறையான அரசியலை வளர்க்க காங்கிரஸ்  தயாராகிறது. தற்கொலைப் படையாக செயல்பட காங்கிரஸ் முடிவெடுத்து விட்டது’’  என்றார். ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதுடிவிட்டரில் ராகுல் நேற்று வெளியிட்ட பதிவில், ‘பிரான்சுடன் செய்யப்பட்ட ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ரகசியம் இல்லை என்று முதலில் கூறிய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன்,  இப்போது மிகப்பெரிய ரகசியம் என்கிறார். ‘பாதுகாப்பு ரகசியம்’ என்ற பிரிவை காரணம் காட்டி அவர் மாற்றி பேசுகிறார். இதில், ஊழல் நடந்திருப்பது நிச்சயம்’ என குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை