பீகார் முதல்வர் அறிவிப்பு விவசாயிகளுக்கு டீசல் மானியம் 10 உயர்வு

தினகரன்  தினகரன்
பீகார் முதல்வர் அறிவிப்பு விவசாயிகளுக்கு டீசல் மானியம் 10 உயர்வு

பாட்னா : பீகாரில் வறட்சி நிலவுவதால், விவசாயிகளுக்கு வழங்கப்படும் டீசல் மானியத்தை முதல்வர் நிதிஷ்குமார் லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தியுள்ளார். பீகாரில் இந்தாண்டு பருவமழை தாமதமாகி உள்ளது. இம்மாநிலத்தில் இதுவரை 48 சதவீத மழை குறைவாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பீகார் விவசாயிகளுக்கு டீசல் மானியமாக லிட்டருக்கு ரூ.40 வழங்கப்பட்டு வருகிறது. மழை தாமதமான காரணத்தா–்ல், இந்த மானியத்தை மேலும் 10 ரூபாய் அதிகரித்து ரூ.50 ஆக வழங்க முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.இது பற்றி இம்மாநில தலைமை செயலாளர் தீபக்குமார் அளித்த பேட்டியில், ‘‘பருவமழை தாமதமானதால் ஏற்பட்டுள்ள நிலைமையை சமாளிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன் ஒரு அம்சமாக, டீசல் மானியம் ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. இது நாளை (இன்று) முதல் அமலுக்கு வருகிறது. மேலும், விவசாயத்துக்கு  பயன்படுத்தப்படும் மின்சார கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 96 பைசாவில் இருந்து 75 பைசாவாக குறைக்கப்படுகிறது’’ என்றார்.

மூலக்கதை