இதுவரை இல்லாத அளவுக்கு மெகா ஆட்சேர்ப்பு மத்திய பாதுகாப்பு படைகளுக்கு 54,000 பேரை சேர்க்க அறிவிப்பு

தினகரன்  தினகரன்
இதுவரை இல்லாத அளவுக்கு மெகா ஆட்சேர்ப்பு மத்திய பாதுகாப்பு படைகளுக்கு 54,000 பேரை சேர்க்க அறிவிப்பு

புதுடெல்லி : இதுவரை இல்லாத வகையில், மத்திய பாதுகாப்பு படைகளுக்கு 54 ஆயிரம் பேரை சேர்க்கும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.54 ஆயிரத்து 953 வேலைவாய்ப்புகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதில் அதிகப்படியாக சிஆர்பிஎப் படைக்கு 21 ஆயிரத்து 566 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய ரிசர்வ் போலீஸ் படை, எல்லை பாதுகாப்புப் படை, இந்தோ-திபெத் எல்லை போலீஸ், மத்திய தொழில் பாதுகாப்பு படை, சஷாத்ரா சீமா பால், அசாம் ரைபிள்ஸ், தேசிய புலனாய்வு மையம் மற்றும் மத்திய அரசு அலுவலகங்களில் பணியமர்த்தப்படும் செயலாளர் பாதுகாப்பு படை ஆகியவற்றிற்கு மொத்தமாக முறையே ஆண்களுக்கு 47 ஆயிரத்து 307 பணியிடங்களும், பெண்களுக்கு 7 ஆயிரத்து 646 பணியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “புதிய படைப்பிரிவுகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதில் மத்திய ஆயுத காவல் படைக்கு புதிதாக தேர்வு செய்யப்படுபவர்கள், நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகள், எல்லை பாதுகாப்பு, சட்ட ஒழுங்கு நிர்வகிப்பு ஆகியவற்றில் ஈடுபடுத்தப்படுவார்கள்” என்றார். வரும் ஆகஸ்ட் 20ம் தேதிவரை இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 முதல் 23 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 10ம் வகுப்பு தேர்வு பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும். இவர்களுக்கு ரூ.21,700 முதல் 69,100 வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட உள்ளது என்றும் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. விண்ணப்பம் செய்பவர்கள், கணினியில் ஒரு தேர்வு எழுத வேண்டும். மேலும் அவர்களுக்கு உடல்தகுதி தேர்வு, மருத்துவ தேர்வு ஆகியவையும் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை