விளைச்சல் பாதிப்பு எதிரொலி கடலை, உ.பருப்பு விலை கடும் உயர்வு : கிலோவுக்கு ரூ15 வரை அதிகரித்தது : சமையல் எண்ணெய் விலையும் எகிறியது

தினகரன்  தினகரன்
விளைச்சல் பாதிப்பு எதிரொலி கடலை, உ.பருப்பு விலை கடும் உயர்வு : கிலோவுக்கு ரூ15 வரை அதிகரித்தது : சமையல் எண்ணெய் விலையும் எகிறியது

சென்னை : விளைச்சல் பாதிப்பு, வரத்து குறைவு எதிரொலியாக கடலைப்பருப்பு  கிலோவுக்கு ரூ.15 வரையும், உளுந்தம் பருப்பு ரூ.5 வரையும் உயர்ந்துள்ளது. தமிழகத்துக்கு  டெல்லி, அரியானா, சண்டிகர் போன்ற மாநிலங்களில் இருந்து கடலைப்பருப்பு  வருகிறது. இங்கு விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடலைப்பருப்பு விலை கடுமையாக உயர  தொடங்கியுள்ளது. அதாவது, 50 கிலோ கொண்ட மூட்டை ரூ.2300க்கு விற்றது ரூ.2900  ஆக உயர்ந்துள்ளது. கிலோ ரூ.50லிருந்து ரூ.65 ஆக விலை உயர்ந்துள்ளது. அதேபோல குஜராத், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், மகராஷ்டிரா, கர்நாடகா,  ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து உளுந்தம் பருப்பு வந்து  கொண்டிருந்தது. அங்கு விளைச்சல் பாதிப்பால் உளுந்தம் பருப்பு விலையும்  உயர்ந்துள்ளது. 100 கிலோ கொண்ட மூட்டை ரூ.6800க்கு விற்றது ரூ.7100 ஆகவும்,  கிலோ ரூ.70லிருந்து ரூ.75 ஆகவும் விலை  அதிகரித்துள்ளது.தமிழகத்தில்  திருச்சி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 25  மாவட்டங்களில் நெல் விளைச்சல் அதிகமாக உள்ளது. அதே போல ஆந்திரா, கர்நாடகா  உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அதிகமாக நெல் வரத்து வந்து கொண்டிருக்கிறது.  நெல் வரத்து அதிகரித்தாலும் தேவை குறைவாக உள்ளது. இதனால் அரிசி விலை குறைய  தொடங்கியுள்ளது. அதாவது, ‘’கோ 51’’ ரக பொன்னி(முதல் ரகம்) ரூ.34லிருந்து  ரூ.30, ‘’கோ 51’’ ரக பொன்னி(இரண்டாம் ரகம்) ரூ.32லிருந்து ரூ.28, ரூபாலி  பொன்னி ரூ.34லிருந்து ரூ.30, டீலக்ஸ் பொன்னி ரூ.36லிருந்து ரூ.32, அதிசய  பொன்னி ரூ.40லிருந்து ரூ.36, பாபட்லா  ரூ.48லிருந்து ரூ44, பாபட்லா(2ம்  ரகம்) ரூ.40லிருந்து ரூ.36, வெள்ளை பொன்னி ரூ.52லிருந்து ரூ.48, இட்லி  அரிசி ரூ.32லிருந்து ரூ.28, இட்லி அரிசி(2ம் ரகம்) ரூ.30லிருந்து ரூ.26,  பொன்னி பச்சரிசி(பழையது) ரூ.52லிருந்து ரூ.48, பொன்னி பச்சரிசி(புதியது)  ரூ.44லிருந்து ரூ.40, கர்நாடகா ஸ்டீம் அரிசி ரூ.50லிருந்து ரூ.44, ஆந்திரா  ஸ்டீம் அரிசி ரூ.48லிருந்து ரூ44 ஆகவும் விலை குறைந்துள்ளது.இதே  போல குஜராத், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து வரும்  நாட்டுப்பூண்டு ரூ.80லிருந்து ரூ.55, நாட்டுப்பூண்டு(2ம் ரகம்)  ரூ.60லிருந்து ரூ.30 ஆகவும், தமிழகத்தின் போடி, கம்பம், தேனி மற்றும்  சீனாவில் இருந்து வரும் மலைப்பூண்டு ரூ.120லிருந்து ரூ.80 ஆகவும் விலை  குறைந்துள்ளது. மத்திய அரசு இறக்குமதி வரி விதித்துள்ளதால் பாமாயில்  ரூ.68லிருந்து ரூ.72, சன் பிளவர் ஆயில் ரூ.83லிருந்து ரூ.89, சன்பிளவர்  ஆயில்(2ம் ரகம்) ரூ.78லிருந்து ரூ.83 ஆகவும் விலை அதிகரித்துள்ளது என்று  தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் சொரூபன் கூறியுள்ளார். இது  குறித்து சொரூபன் மேலும் கூறுகையில், “ தான்சானியா, பர்மா போன்ற நாடுகளில்  இருந்து மத்திய அரசு இறக்குமதி செய்ய அனுமதி அளித்துள்ளது. இதனால்,  உளுந்தம் பருப்பு வரும் நாட்களில் விலை  குறைய வாய்ப்புள்ளது. அதே போல  விளைச்சல் பாதிப்பால் கடலைப்பருப்பு கிலோவுக்கு இன்னும் ரூ.2 முதல் ரூ.4  வரை விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது” என்றார்.

மூலக்கதை