புதிதாக சேர்க்க இலக்கு வருமான வரி பட்டியலில் கூடுதலாக 1.25 கோடி பேர்

தினகரன்  தினகரன்
புதிதாக சேர்க்க இலக்கு வருமான வரி பட்டியலில் கூடுதலாக 1.25 கோடி பேர்

புதுடெல்லி : நாடு முழுவதும் கூடுதலாக 1.25 கோடி பேரை வருமான வரி செலுத்துவோர் பட்டியலில் கொண்டு வரும்படி வருமான வரித்துறைக்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவுறுத்தியுள்ளது. வருமான வரித்துறைக்கான கொள்கைகளை வடிவமைப்பதில் மத்திய நேரடி வரிகள் வாரியம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்த வாரியம் வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், வருவாயை அதிகரிக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. புதிதாக வரி செலுத்துவோரை பட்டியலில் கொண்டு வரும்படி வருமான வரித்துறைக்கு இது அறிவுறுத்தியுள்ளது. வரிதளத்தை அதிகரிக்கும் அரசின் முயற்சியின் ஒருபகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் பயனாக 2017-2018ம் நிதியாண்டில்  வருமான வரி செலுத்துவோர் பட்டியலில் புதிதாக 1.06 கோடி பேர் கொண்டு வரப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த ஆண்டில் நாடு முழுவதும் கூடுதலாக 1.25 கோடி பேரை இந்த  வரி செலுத்துவோர் பட்டியலில் இணைப்பதற்கு மத்திய நேரடி வரிகள் வாரியம்  இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த புதிய இலக்கின்படி வடமேற்கு பகுதி வரி அலுவலகங்கள் (அரியானா, பஞ்சாப், இமாச்சல பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர்) அதிகப்பட்சமாக 11.48 லட்சம் பேரை புதிதாக வரி செலுத்துவோர் பட்டியலில் இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், புனே 11.33 லட்சம் பேர், தமிழ்நாடு 10.36 லட்சம் பேரை புதிதாக பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆந்திர பிரதேசம், தெலங்கானாவில் 10.40 லட்சம், குஜராத் 9.88 லட்சம் பேர், கர்நாடகா, கோவாவில் 7.95 லட்சம் பேரையும், மற்ற மாநிலங்களில் இருந்து குறிப்பிட்ட எண்ணிக்கையிலும் புதிய நபர்களை வருமான வரி செலுத்துவோர்  பட்டியலில் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

மூலக்கதை