கட்டிப்பிடிப்பு பரபரப்புக்கு இடையே இன்று ராகுல் காங்., தலைவரான பின் முதல் காரிய கமிட்டி கூட்டம்: 4 மாநில தேர்தல், நிர்வாகிகள் களையெடுப்பு குறித்து ஆலோசனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
கட்டிப்பிடிப்பு பரபரப்புக்கு இடையே இன்று ராகுல் காங்., தலைவரான பின் முதல் காரிய கமிட்டி கூட்டம்: 4 மாநில தேர்தல், நிர்வாகிகள் களையெடுப்பு குறித்து ஆலோசனை

புதுடெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி இருந்த நிலையில், கடந்தாண்டு டிசம்பர் மாதம் காங்கிரஸ் தலைவர் பதவியை அவரது மகன் ராகுல் காந்தி ஏற்றார். இவர் பதவியேற்ற 2 மாதங்களில் தேசிய அளவிலான காரிய கமிட்டியை கலைத்தார்.

கடந்த 17ம் தேதி, 51 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் காரிய கமிட்டியில், 23 பேருக்கு முக்கியத்துவம் ெகாடுத்து புதிய காரிய கமிட்டியை அமைத்தார்.
ேமலும், 18 பேர் நிரந்தர அழைப்பாளர்களாகவும், 10 பேர் சிறப்பு அழைப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மோதிலால் வோரா, குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே, ஏ. கே. அந்தோணி, அகமது பட்டேல், அம்பிகா சோனி ஆகியோர் காரிய கமிட்டியில் நீடிப்பார்கள்.

மூத்த தலைவர்கள் திக்விஜய் சிங், ஜனார்த்தன் திவிவேதி, கமல்நாத், சுஷில் குமார் ஷிண்டே, மோகன் பிரகாஷ், சி. பி. ஜோஷி ஆகியோர் காரிய கமிட்டியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.

முன்னாள் முதவர்கள் சித்தராமையா, உம்மன் சாண்டி, அசோக் கெலாட், தருண் கோகாய், ஹரிஷ் ராவத் ஆகியோர் காரிய கமிட்டியில் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர். மூத்த தலைவர்கள் ப. சிதம்பரம், ஷீலா தீட்சித், ஜோதிர்ஆதித்ய சிந்தியா, பாலாசாகேப் தோரட், தாரிக் அகமது கர்ரா உள்ளிட்டோர் காரிய கமிட்டியின் நிரந்தர அழைப்பாளர்களாக இருப்பர்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்றதற்கு பிறகு இன்று டெல்லியில்  காரிய கமிட்டியின் முதல் கூட்டம் நடந்தது. இதில், சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொள்ள அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கும், சட்டசபை காங்கிரஸ் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

கடந்த 20ம் தேதி லோக்சபாவில் மத்திய பாஜ அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ராகுல்காந்தி பேசிய விதம் மற்றும் பிரதமரை கட்டிப்பிடித்தது போன்ற நிகழ்வுகள் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இன்றைய கூட்டம் நடக்கிறது.

வரும் 2019ம் ஆண்டுக்கான லோக்சபா தேர்தல், பிரதமர் மோடிக்கு ஒரு பெரும் சவாலாக இருக்கும் என்ற நம்பிக்கையை, ராகுல் காந்தி வெளிப்படுத்தியது, கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதற்கிடையே, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மிசோரம் ஆகிய 4 மாநிலங்களில் இந்தாண்டு டிசம்பருக்குள் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதால், இன்றைய காரிய கமிட்டி கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதேபோல், நாடு முழுவதும் புதுச்சேரி தவிர 21 மாநிலங்களில் பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்து வருவதால், மாநில தலைமை மிகவும் பலவீனமாகவும் உள்ளது.

அதனால், தமிழகம் உள்ளிட்ட பல மாநில தலைவர்களின் பதவியை காலி செய்ய, எதிர்ப்பு அணி காரிய கமிட்டி உறுப்பினர்கள் பெரிய புகார் பட்டியலுடன் இன்றைய கூட்டத்தில் பங்கேற்பதாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.

கட்டிப்பிடிப்பு பரபரப்புக்கு இடையே, காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டமும் நடப்பதால் தற்போது ராகுல்காந்தி முக்கிய விவாத பொருளாகிவிட்டார்.

.

மூலக்கதை