‘பாஜவை நீக்கு... நாட்டை காப்பாற்று’: மேற்குவங்க முதல்வர் மம்தா முழக்கம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
‘பாஜவை நீக்கு... நாட்டை காப்பாற்று’: மேற்குவங்க முதல்வர் மம்தா முழக்கம்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தியாகிகள் தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. அப்போது, அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி பேசியதாவது:
மத்தியில் ஆட்சி புரிந்து கொண்டிருக்கும் பாஜ அரசு சீக்கிரமே அகற்றப்படும்.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜ அரசுக்கு வரும் 2019ம் ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய அடிவிழும். அதில், 100க்கும் குறைவான தொகுதிகளில் மட்டுமே அக்கட்சி வெற்றிபெறும்.

பாஜவை எப்படி அகற்றுவது என்பதை மேற்கு வங்க மாநிலம் காட்டும். பந்தலைக் கூட சரியாக போட முடியாதவர்கள், நாட்டை ஆள நினைக்கிறார்கள்.

அதனால், பாஜவை ஆட்சியில் இருந்து நீக்க வேண்டும். நாட்டை காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கடந்த சில நாட்களுக்கு முன், மேற்கு வங்க மாநிலம் மிட்னாபூரில் நடந்த பொதுக் கூட்டத்தில், பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, மேற்கூரை ஒன்று சரிந்து விழுந்ததால், 90 பேருக்குக் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தைத்தான், மம்தா சூசகமாக விமர்சித்துள்ளார்.

மேலும், ‘பாஜவை நீக்கு, நாட்டைக் காப்பாற்று’ என்ற முழக்கத்துடன் வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி மிகப் பெரிய பிரசாரத்தை திரிணாமுல் காங்கிரஸ் ஆரம்பிக்க உள்ளது. தொடர்ந்து, ஜனவரி 19ம் தேதி ஒரு பெரும் மாநாடு ஒருங்கிணைக்கப்பட உள்ளதால், அதில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


.

மூலக்கதை