தனியார் மருத்துவமனை கட்டிட விபத்து: இன்ஜினியர்கள் 2 பேர் கைது

தமிழ் முரசு  தமிழ் முரசு
தனியார் மருத்துவமனை கட்டிட விபத்து: இன்ஜினியர்கள் 2 பேர் கைது

சென்னை: சென்னை கந்தன்சாவடியில் தனியார் மருத்துவமனை கட்டிடத்தின் கட்டுமான பணியின் போது சாரம் சரிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்தார். இடிபாடுகளில் இருந்து 32 பேர் மீட்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கட்டுமான பொறியாளர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சென்னை பெருங்குடி அடுத்த கந்தன்சாவடி பகுதியில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

அந்த பகுதியில் கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபல  ஜெம் மருத்துவமனையின் கிளை சென்னை கந்தன்சாவடி எம்ஜிஆர் நகர் சாலையில் பிரம்மாண்டமான வகையில் 8 மாடி கொண்ட கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிட பணி 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, தனித்தனியாக கட்டுமான பணி நடந்து வருகிறது.

இதற்காக, சாரம் அமைக்கும் பணி நடந்து வந்தது. இந்த நிலையில், நேற்று இரவு கட்டிடத்தில் சாரம் அமைக்கும் பணியில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.



அப்போது, எதிர்பாராத விதமாக சாரத்தின் பிடி தளர்ந்து அருகில் உள்ள குடியிருப்புகள் மீது சரிந்து விழுந்தது. இதில், 50க்கும் மேற்பட்ட கட்டிட தொழிலாளர்கள் சிக்கினர்.

உடனே இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து  இடிபாடுகளில் சிக்கியிருந்த ஊழியர்களை மீட்டனர். அப்போது, சாரத்திற்கு அடியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த பப்லு (19) சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், இடிபாடுகளில் சிக்கியவர்களை தீயணைப்பு வீரர்கள், பேரிடர் மீட்பு குழுவினர் மோப்ப நாய் உதவியுடன் இரவு முழுவதும் போராடி 32 பேரை காயங்களுடன் உயிருடன் மீட்டனர். உடனே மீட்கப்பட்ட அனைவரையும் அருகில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கட்டுமான பணியின் போது எவ்வளவு பேர் பணியாற்றினர் என்பது குறித்து பட்டியல் எடுக்கப்பட்டு, அதை வைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.   இந்த விபத்தில் கட்டுமான பணி நடைபெற்ற இடம் அருகே அமைந்துள்ள வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதம் அடைந்தது.

மேலும், இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா, பேரிடர் மேலாண்மை ஆணையர் ராஜேந்திர ரத்னு உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் வந்து மீட்பு பணிகளை விரைவுபடுத்தினர்.   மேலும், இந்த விபத்து தொடர்பாக தரமணி போலீசார் வழக்கு பதிவு செய்து மருத்துவமனை கட்டுமான பணியின் ஒப்பந்த நிறுவன பொறியாளர்களான முருகேசன் மற்றும் சிலம்பரசனை பிடித்து விசாரித்தனர்.

அப்போது, முறையாக பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு சாதனங்களை பயன்படுத்தாமல் சாரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டதே இந்த விபத்துக்கு காரணம் என்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து இரண்டு பொறியாளர்கள் மீது ஐபிசி 337, 338, 304 (A), 179 ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும், இந்த விபத்து தொடர்பாக கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் நிர்வாகிகளிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 இந்த கட்டுமான பணிக்கு சிஎம்டிஏவிடம் முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது. மேலும் இந்த விபத்து குறித்து ஆர்டிஓவும் விசாரணை நடத்தி வருகிறார்.

11 மாடி கொண்ட மவுலிவாக்கம் கட்டிட விபத்திற்குபிறகு மீண்டும் ஒரு பெரிய விபத்தாக சாரம் சரிந்து ஒருவர் உயிரிழந்து, 32 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கேமிரா பதிவு அழிப்பு: இடிபாட்டில் உள்ள பல டன் இரும்பு சேனல், தகடு, ராடுகள் அகற்றப்பட்டு மாநகராட்சி லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டது.    இறந்தவரை பத்திரிகையாளர்கள் வீடியோ மற்றும் புகைப்
படம் எடுத்தபோது போலீசார் கேமிராவை பிடுங்கி அதில் பதிவானதை அழித்தனர்.

.

மூலக்கதை