‘நியமன எம்எல்ஏக்களை பேரவைக்குள் அனுமதிக்க வேண்டும்’ .... நிபந்தனையுடன் பட்ஜெட்டுக்கு கவர்னர் கிரண்பேடி ஒப்புதல்

தினகரன்  தினகரன்
‘நியமன எம்எல்ஏக்களை பேரவைக்குள் அனுமதிக்க வேண்டும்’ .... நிபந்தனையுடன் பட்ஜெட்டுக்கு கவர்னர் கிரண்பேடி ஒப்புதல்

புதுச்சேரி: 3 நியமன எம்.எல்.ஏ.க்களையும் சட்டசபைக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் பட்ஜெட்டுக்கு கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார். புதுச்சேரியில் கடந்த 7 ஆண்டுகளாக முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் நாராயணசாமி கடந்த மார்ச் மாதம் 4 மாத செலவினங்களுக்கான (மார்ச், ஏப்ரல், மே, ஜூன்) இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன்பிறகு ஜூன் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என கூறியிருந்தார். ஆனால் மத்திய அரசு, பட்ஜெட்டுக்கு காலதாமதமாக அனுமதி வழங்கியதால் கடந்த 2ம் தேதி முதல்வர் நாராயணசாமி 2018-19ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.  அதன்பிறகு சபாநாயகர் வைத்திலிங்கம் தலைமையில் சட்டசபை அலுவல் குழு கூடி ஜூலை 27ம் தேதி வரை கூட்டத்தொடரை நடத்த முடிவெடுத்து அதன்படி கூட்டம் நடந்தது. கூட்டத்தொடரின் முடிவில் அரசின் தீர்மானங்கள் கடந்த 19ம் தேதி நிறைவேற்றப்பட்டு, நிதி ஒதுக்க மசோதாவுக்கு அவையில் ஒப்புதல் பெறப்பட்டு சட்டசபை அலுவல்கள் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் பட்ஜெட் நிதி மசோதாவுக்கு கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் அளிக்காததை கடந்த 19ம் தேதி சட்டசபையில் சுட்டிக்காட்டிய சபாநாயகர் வைத்திலிங்கம் கூட்டத்தொடரை காலவரையின்றி ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.இந்தநிலையில், கவர்னர் கிரண்பேடி நேற்று நிருபர்களிடம் கூறும்போது, ``3 நியமன எம்.எல்.ஏ.க்களையும், சட்டசபைக்குள் அனுமதிப்பது தொடர்பான நகலை நேற்றிரவு சபாநாயகருக்கு அனுப்பி உள்ளேன். அவர்களை சட்டசபையில் பங்கேற்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனால் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதை சட்டசபையில் நிறைவேற்ற நிபந்தனை விதித்து நிதி மசோதாவுக்கு அனுமதி அளித்துள்ளேன். இதற்கான கோப்பு கையெழுத்திட்டு சபாநாயகருக்கு அனுப்பப்பட்டு உள்ளது. ஏற்கனவே 27ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடரை நடத்த என்னிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. எனவே சபாநாயகர் விரைவில் சட்டசபையை கூட்டி நிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெற வேண்டும்’ என்று தெரிவித்தார்.

மூலக்கதை