இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு தடை விதிப்பதில் இருந்து விலக்கு : அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் விருப்பம்

தினகரன்  தினகரன்
இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு தடை விதிப்பதில் இருந்து விலக்கு : அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் விருப்பம்

வாஷிங்டன்: ரஷ்யாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு பொருளாதார தடை விதிப்பதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஜிம் மேட்டிஸ் விருப்பம் தெரிவித்துள்ளார்.ரஷ்யாவை குறிவைத்து எதிரிகளை எதிர்க்கும் சட்டத்தை (சிஏஏடிஎஸ்ஏ) அமெரிக்கா கடந்த ஆண்டு கொண்டு வந்தது. இச்சட்டத்தின்படி, ரஷ்யாவுடன் ராணுவ ஒப்பந்தம் மேற்கொள்ளும் நாடுகளை எதிரி நாடுகள் பட்டியலில் சேர்த்து பொருளாதார தடைகளை விதிக்க வழிவகை செய்தது. இதற்கிடையே, ரஷ்யாவுடன் 2016ல் மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படி, ‘எஸ்-400 டிரையம்ப்’ ஏவுகணையை இந்தியா வாங்குவதற்கான நடைமுறைகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன.இந்த ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொண்டால், அமெரிக்காவின் பொருளாதார தடையை சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால், அதையும் மீறி ரஷ்யாவிடம் ஏவுகணை வாங்குவதில் இந்தியா உறுதியாக உள்ளது. அதே நேரத்தில், இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு பொருளாதார தடை விதிப்பதில் இருந்து விலக்களிக்க வேண்டுமென அமெரிக்க எம்பி.க்கள் வலியுறுத்தி உள்ளனர். அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோவும் இந்தியாவுக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்துள்ளார்.இந்நிலையில், தற்போது அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஜிம் மேட்டிசும் இந்தியாவுக்கு தடை விதிக்கக் கூடாது என கருத்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘உக்ரைனில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு, நாச வேலைகள் செய்ததற்கான விளைவுகளை ரஷ்யா எதிர்கொண்டே ஆக வேண்டும். அதற்காக கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்டத்தில், சில நாடுகளுக்கு விலக்கு அளிக்க வேண்டியதும் அவசியம். அப்போதுதான் அவர்கள் ரஷ்ய ராணுவ ஆயுதங்களை நம்புவதற்கு பதிலாக அமெரிக்கா உடனான நெருங்கிய பாதுகாப்பு உறவு மேலும் வலுப்படுத்தும் வகையில் மாறுவார்கள்’’ என்றார். முன்னதாக, மேட்டிஸ் இது தொடர்பாக ஆயுத சேவைகள் கமிட்டியின் செனட் சபை தலைவர் ஜான் மெக்கைனுக்கு கடிதம் எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை