கடன் பத்திர முதலீட்டாளர்களுக்கு ரிலையன்ஸ் கம்யூ., அழைப்பு

தினமலர்  தினமலர்
கடன் பத்திர முதலீட்டாளர்களுக்கு ரிலையன்ஸ் கம்யூ., அழைப்பு

புதுடில்லி : அனில் அம்பானி தலைமையிலான, 'ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்' நிறுவனம், 'சீனியர் செக்யூர்டு நோட்ஸ்' கடன் பத்திர முதலீட்டாளர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.பிரிட்டன் தலைநகர் லண்டனில், ஆக., 10ல் இக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில், கடன் பத்திரங்களின் மறுசீரமைப்பு, முதிர்வு காலத்தை நீட்டிப்பது, சொத்து விற்பனை உள்ளிட்ட அம்சங்கள் பரிசீலிக்கப்படும் என, தெரிகிறது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், 2015, மே மாதம், டாலரில் முதலீடு செய்யக்கூடிய, சீனியர் செக்யூர்டு நோட்ஸ் கடன் பத்திரங்களை, லண்டன் பங்குச் சந்தையில் வெளியிட்டது.இக்கடன் பத்திரங்கள், ஐந்து ஆண்டுகள் முதிர்வு காலத்துடன், 6.5 சதவீத வட்டி விகிதத்தில் வெளியிடப்பட்டன.இந்நிலையில், 45 ஆயிரம் கோடி ரூபாய் கடன் நெருக்கடியால், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், கடந்த ஆண்டு இறுதியில், தொலை தொடர்பு சேவைப் பிரிவை மூடியது. அத்துடன், இதர சொத்துகளை விற்பனை செய்து, கடன்களை சீரமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.இதன் காரணமாக, சீனியர் செக்யூர்டு நோட்ஸ் கடன் பத்திர முதலீட்டாளர்களுக்கு, வட்டி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதையடுத்து, கடன் பத்திர முதலீட்டாளர்களின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்படும் மறுசீரமைப்பு திட்டங்களுக்கு, முதலீட்டாளர்களிடம் ஒப்புதல் கோரப்படும். முக்கியமாக, கடன் பத்திரங்களின் முதிர்வு காலத்தை, 2028 வரை தள்ளி வைக்கும் தீர்மானம் கொண்டு வரப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், இந்தாண்டு, ஜன., - மார்ச் காலாண்டில், 19 ஆயிரத்து, 728 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை