மகளிர் உலக கோப்பை ஹாக்கி : இந்தியா - இங்கிலாந்து டிரா

தினகரன்  தினகரன்
மகளிர் உலக கோப்பை ஹாக்கி : இந்தியா  இங்கிலாந்து டிரா

லண்டன்: மகளிர் உலக கோப்பை ஹாக்கி தொடரில், இந்தியா - இங்கிலாந்து மோதிய லீக் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.லண்டனில் நேற்று தொடங்கிய இந்த தொடரின் பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, தனது முதல் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை சந்தித்தது. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில், உலக தரவரிசையில் 10வது இடத்தில் இருக்கும் இந்தியா 2வது ரேங்க் அணியான இங்கிலாந்துக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. முதல் 15 நிமிட ஆட்டத்தில் கோல் ஏதும் விழாமல் இரு அணிகளும் சமநிலை வகித்தன.2வது குவார்ட்டரில் இந்திய வீராங்கனை நேஹா கோயல் (25வது நிமிடம்) அபாரமாக கோல் அடித்து 1-0 என முன்னிலை ஏற்படுத்தினார்.சிறப்பாக செயல்பட்ட இந்திய கோல் கீப்பர் சவிதா இங்கிலாந்தின் பல முயற்சிகளை தடுத்து அசத்தினார். எனினும், கடைசி கட்டத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் இங்கிலாந்தின் லிலி ஓஸ்லி (53வது நிமிடம்) மின்னல் வேகத்தில் கோல் அடித்து சமன் செய்தார். மேற்கொண்டு கோல் விழாததால் இப்போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. இரு அணிகளும் தலா 1 புள்ளிகள் பெற்றன. இந்தியா தனது 2வது லீக் ஆட்டத்தில் ஜூலை 26ம் தேதி அயர்லாந்து அணியையும், 3வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் ஜூலை 29ம் தேதி அமெரிக்காவையும் எதிர்கொள்கிறது.

மூலக்கதை