கல்லணையில் இன்று பாசனத்துக்கு திறப்பு

தினமலர்  தினமலர்
கல்லணையில் இன்று பாசனத்துக்கு திறப்பு

திருச்சி : மேட்டூர் அணையில், டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர், நேற்று, முக்கொம்பு அணையை கடந்து, கல்லணை நோக்கி பாய்ந்தது. கடந்த 19ம் தேதி, தமிழக முதல்வர் பழனிசாமி, மேட்டூர் அணையில் இருந்து, டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விட்டார்.
காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ள தண்ணீர், மேட்டூர் அணையில் இருந்து, 110 மைல் துாரத்தில் உள்ள, திருச்சி மாவட்டம், முக்கொம்பு அணைக்கு, நேற்று மாலை வந்தது. திருச்சி மாவட்ட விவசாயிகள், மலர்கள் மற்றும் நெல் துாவி, காவிரியை வரவேற்றனர். கல்லணையில் இருந்து, டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளதால், ஏற்கனவே முக்கொம்பு அணையில் குடிநீர் தேவைக்காக தேக்கப்பட்டிருந்த தண்ணீர், கல்லணைக்கு திறக்கப்பட்டிருந்தது. அந்த தண்ணீருடன், மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரும் சேர்ந்து, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் வழியாக, நேற்று இரவு, தஞ்சை மாவட்டத்தில் உள்ள கல்லணையை சென்றடைந்தது கல்லணையில் இருந்து காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு மற்றும் கல்லணை கால்வாய்களில், டெல்டா பாசனத்துக்கு, இன்று காலை, தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

மூலக்கதை