வங்க கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்.... ஒடிசா, ஆந்திராவில் கனமழை வெளுத்து வாங்கும்?

தினகரன்  தினகரன்
வங்க கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்.... ஒடிசா, ஆந்திராவில் கனமழை வெளுத்து வாங்கும்?

டெல்லி: வங்க கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் வலுப்பெற்றுள்ளதால் ஒடிசா, ஆந்திராவில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக வடமாநிலங்களில் கடந்த 2 வாரங்களாக தொடர்ச்சியாக பலத்த மழை கொட்டி வருகிறது. தமிழகத்தில் மேற்குதொடர்ச்சி மலையொட்டிய பகுதிகளில் மட்டும் தினமும் பலத்த மழை பெய்கிறது. நேற்று முன்தினம் நீலகிரி மாவட்டம் தேவலாவில் 80 மி.மீ மழை பெய்தது. வங்க கடல் பகுதியில் பருவக்காற்று பலமாக வீசி வருகிறது. இந்த நிலையில், பருவமழையையொட்டி வடமேற்கு வங்க கடல் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது ஆந்திரா மற்றும் ஒடிசா கடல்பகுதியில் நிலை கொண்டிருந்தது.பின்னர் கடந்த வாரம் அந்த காற்றழுத்தம் ஒடிசா நோக்கி நகர்ந்தது. காற்றின் வேகத்தை பொறுத்து காற்றழுத்தம் மெல்ல, மெல்ல வலுப்பெற்று புயல் சின்னமாக மாறியது. இந்த நிலையில், காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. பின்னர் வடமேற்கு பகுதியில் இருந்து மணிக்கு 20 கி.மீ வேகத்தில் நேற்று நகர்ந்தது.நேற்று காலை 11.30 மணி நிலவரப்படி காற்றழுத்தம் வடமேற்கு வங்க கடலில் ஒடிசாவின்  பலாசோர் பகுதியின் தென்மேற்கு பகுதியில் இருந்து 70 கி.மீ தொலைவிலும், மேற்கு வங்காளத்தின் திகா பகுதியில் இருந்து 50 கி.மீ தொலைவிலும், ஒடிசாவின் சந்த்பள்ளி பகுதியில் இருந்து 110 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டிருந்தது. பின்னர் நேற்று மாலை வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் கடல் பகுதியை நோக்கி நகர்ந்தது. புயல் சின்னம் வலுப்பெற்றுள்ளதால் இன்று ஒடிசா, மேற்கு வங்காளம், ஜார்கண்ட், சத்தீஷ்கர், தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இன்றும், நாளையும் மிக, மிக பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதேசமயம், புயல் சின்னம் தொடர்ந்து மேற்கு வங்காளம் நோக்கி நகர்வதால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் முன்னெச்சரிக்கை கருதி அனைத்து துறைமுகங்களிலும் 1ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மூலக்கதை