ராஜஸ்தானில் 2வது சம்பவம் : பசு பாதுகாப்பு என்ற பெயரில் வாலிபரை அடித்து கொன்றது கும்பல்

தினகரன்  தினகரன்
ராஜஸ்தானில் 2வது சம்பவம் : பசு பாதுகாப்பு என்ற பெயரில் வாலிபரை அடித்து கொன்றது கும்பல்

ஜெய்ப்பூர்: பசு பாதுகாப்பு என்ற பெயரில் ராஜஸ்தானில் வாலிபர் ஒருவர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்வார் மாவட்டத்தின் லாலாவண்டி கிராமத்தை ஒட்டிய வனப்பகுதி வழியாக அக்பர்கான் (28) என்பவரும், மற்றொருவரும் 2 மாடுகளை அரியானாவில் உள்ள தங்கள் கிராமத்திற்கு ஓட்டிச் சென்று கொண்டிருந்தனர். இரவு நேரத்தில் அவர்களை வழிமறித்த கும்பல், மாடுகளை கடத்திச் செல்வதாக கூறி சரமாரியாக தாக்கியது.இதில், அக்பர்கான் படுகாயமடைந்தார். அவருடன் வந்த நபர் தப்பி ஓடினார். தகவலறிந்த ராம்கர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, படுகாயத்துடன் கிடந்த அக்பர்கானை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் அடையாளம் தெரியாத நபர்கள் மீது சட்டப்பிரிவு 302ன் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். அக்பர்கான் மாடுகளை கடத்த முயன்றாரா என்பது குறித்த குற்றச்சாட்டு இன்னும் உறுதி செய்யப்படவில்லை. பசு பாதுகாப்பு என்ற பெயரில் ராஜஸ்தானில் நடக்கும் 2வது கொலை சம்பவம் இது. இதற்கு முன் கடந்த ஆண்டு ஏப்ரலில் அல்வாரில் வசித்த பால் வியாபாரி அடித்து கொல்லப்பட்டார்.காங்கிரஸ் கடும் கண்டனம்:ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே அளித்த பேட்டியில், ‘‘அல்வாரில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் வாலிபரை கும்பல் அடித்துக் கொன்றது கண்டனத்துக்குரியது. இதில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் அசோக் ெகலாட் கூறுகையில், ‘‘கொடூரமான இச்சம்பவம் துரதிஷ்டவசமானது. உச்ச நீதிமன்ற எச்சரிக்கைக்கு பிறகும் இதுபோல் நடந்துள்ளது. பாஜ ஆளும் மாநிலங்களில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறைகள் அதிகளவில் நடக்கின்றன. இவற்றை தடுத்து நிறுத்த வசுந்தரா ராஜே அரசு தவறிவிட்டது’’ என்றார்.

மூலக்கதை