திடீர் போட்டியில் தனுஷ், சிவகார்த்திகேயன்

தினமலர்  தினமலர்
திடீர் போட்டியில் தனுஷ், சிவகார்த்திகேயன்

அரசியல் களத்தை மட்டுமல்ல, திரைக் களத்தையும் பரபரப்பாக வைத்திருப்பதில் சமூக வலைத்தளங்களுக்கும் முக்கிய பங்குண்டு. ஒரு படத்திற்கான முதல் பார்வை, டீசர், டிரைலர், போஸ்டர்கள் ஆகியவை சமூக வலைத்தளங்களில்தான் அதிகம் வெளியிடப்படுகின்றன.

சில படங்களின் வெளியீடுகளைப் பற்றி முன்னரே அறிவித்துவிட்டு செய்வார்கள். சில படங்களின் வெளியீடுகளை குறைந்த முன்னறிவிப்பில் திடீரென நிகழ்த்தவார்கள். அப்படித்தான் நேற்று 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் புதிய லுக்கை வெளியிட்டு ஒரு போட்டியை உருவாக்கினார்கள்.

சிவகார்த்திகேயன், சமந்தா நடித்துள்ள 'சீமராஜா' படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு அறிவிப்பை நேற்று வெளியிட உள்ளதாக சில தினங்களுக்கு முன்பே அறிவித்திருந்தார்கள். அதன்படி நேற்று இரவு 7 மணிக்கு அது பற்றிய சிறிய வீடியோவுடன் அறிவிப்பை வெளியிட்டார்கள். அதற்கடுத்த அரை மணி நேரத்திற்குள் தனுஷ், மேகா ஆகாஷ் நடிக்கும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் புதிய போஸ்டர்களை இயக்குனர் கவுதம் மேனன் வெளியிட்டார்.

நேற்றைய டுவிட்டர் டிரென்டிங்கில் இந்த இரண்டு படங்களுக்கும் இடையில் தான் கடுமையான போட்டி இருந்தது. இருப்பினும் 'சீமராஜா' படத்தின் டிரென்டிங் பல ஹேஷ்டேக்குகளில் சீறிக் கொண்டு சென்று முன்னிலையில் இருந்தது. அதே சமயம், கவுதம் மேனன் வெளியிட்ட 'எனை நோக்கி பாயும் தோட்டா' புதிய போஸ்டர்களை படத்தின் நாயகன் தனுஷ் அவருடைய டுவிட்டர் தளத்தில் கூட பகிர்வு செய்யாதது ஆச்சரியமாக இருந்தது.

மூலக்கதை