பஞ்சு விலை உயர்வால் நூல், துணி உற்பத்தி 60 சதவீதம் சரிவு

தினகரன்  தினகரன்
பஞ்சு விலை உயர்வால் நூல், துணி உற்பத்தி 60 சதவீதம் சரிவு

கோவை: நாட்டில் பஞ்சு விலை கடந்த 2 மாதத்தில் ஒரு கண்டிக்கு ரூ.8 ஆயிரம் அதிகரித்துள்ளதால், நூல் விலை கிலோவிற்கு ரூ.35 வரை உயர்ந்துள்ளது. அதற்கேற்ப துணி உள்ளிட்ட ஜவுளி உற்பத்தி பொருட்களுக்கு விலை கிடைக்காததால், உற்பத்தி 60 சதவீதம் குறைந்துள்ளது. நாட்டில் நூல் உற்பத்திக்கு தேவையான பஞ்சு விலை ஒரு கண்டி (355 கிலோ) கடந்த மே மாதத்தில் ரூ.42 ஆயிரமாக இருந்தது.கடந்த 2 மாதத்தில் கண்டிக்கு ரூ.8 ஆயிரம் வரை உயர்ந்து தற்போது ரூ.50 ஆயிரமாகியுள்ளது. பஞ்சு விலை உயர்வால், நூற்பாலைகள் தாங்கள் உற்பத்தி செய்யும் நூல்களின் விலையை கிலோவிற்கு ரூ.35 வரை அதிகரித்துள்ளது. குறிப்பாக 80ம் எண் நூல்கள் கடந்த ஏப்ரலில் கிலோ ₹385 ஆக இருந்தது. 2 மாதத்தில் கிலோவிற்கு ரூ.35 உயர்ந்து, தற்போது ரூ.420 ஆகியுள்ளது. இது போல் 20, 40, 60 உள்ளிட்ட இதர எண்களின் நூல்களின் விலையும் உயர்ந்துள்ளதால் விசைத்தறி துணி, லுங்கி, சேலைகள் உள்ளிட்ட ஜவுளி பொருட்களின் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. அதற்கேற்ப ஜவுளி பொருள்களுக்கு விலை கிடைக்காததால், நஷ்டத்திற்கு விற்காமல் இருப்பு வைத்துள்ளனர். உற்பத்தியை 60 சதவீதம் குறைந்துள்ளனர். அதன் எதிரொலியாக நூல் விற்பனையும் குறைந்து, நூற்பாலைகளில் உற்பத்தியாகும் நூல்களும் 50 சதவீதம் வரை தேக்கம் அடைந்து, நூற்பாலைகளிலும் உற்பத்தி குறைக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஜவுளி உற்பத்தி தொழில் துறையினர் கூறியதாவது: ஜவுளி உற்பத்தி பொருட்களுக்கு மூலாதாரமான பஞ்சு வரத்து கடந்த 3 மாதமாக குறைந்துள்ளது. இந்நிலையில், உள்நாட்டில் உள்ள பஞ்சை உள்நாட்டில் உள்ள உற்பத்தியாளர்களுக்கு கிடைக்காத வகையில், ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் உள்நாட்டில் பஞ்சுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு விலை உயர்ந்து வருகிறது. பஞ்சு ஏற்றுமதியை குறைக்கவும், உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு சீராக கிடைக்கவும் இந்திய பருத்தி கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஜவுளி உற்பத்தி தொழிலில் நூற்பாலைகள், பாவுநூல் தயாரிக்கும் சைசிங் மில்கள், விசைத்தறிகள், கைத்தறிகள், ஆயத்த ஆடை உற்பத்தி ஆகியவை சங்கிலித்தொடராய் பாதிக்கும் நிலை ஏற்பட்டு வேலை இழப்பு அதிகரிக்கும் என்றனர்.

மூலக்கதை