நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் கூடுதலாக 1.3 கோடி பேரை வரி செலுத்த வைக்க இலக்கு

தினகரன்  தினகரன்
நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் கூடுதலாக 1.3 கோடி பேரை வரி செலுத்த வைக்க இலக்கு

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் புதிதாக 1.3 கோடி பேரை வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வைக்க வேண்டும் என்று வருமான வரித்துறைக்கு மத்திய நேரடி வரிகள் ஆணையம் இலக்கு நிர்ணயித்துள்ளது.வரி வருவாயை அதிகரிக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. பண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு, வரி ஏய்ப்பை கண்டறிவதில் மத்திய அரசு கவனம் செலுத்த தொடங்கியது. எனவே வரி வருவாயை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டது. இதன்படி மண்டலம் வாரியாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வருமான வரி செலுத்துவோர் பட்டியலில் பலர் சேர்க்கப்பட்டுள்ளனர். நடப்பு ஆண்டிலும் புதிதாக 1.3 கோடி பேரை வரி வரம்புக்குள் கொண்டு வந்து, வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வைக்க மத்திய நேரடி வரிகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக, மண்டலம் வாரியாக இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் அனைத்து மண்டலங்களும் சேர்த்து 13.3 லட்சம் பேரை சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து வடமேற்கு மண்டலத்தில் 11.5 லட்சம் பேர், புனே 11.3 லட்சம் பேர், ஆந்திரா, தெலங்கானா, தமிழகத்தில் தலா 10.4 லட்சம் பேர், டெல்லியில் 7 லட்சம் பேர், மும்பையில் 6.7 லட்சம் பேரை நடப்பு ஆண்டில் வரி வரம்புக்குள் கொண்டு வந்து கணக்கு தாக்கல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது: வரி செலுத்துவோர் எண்ணிக்கையை அதிகரிக்க அதிரடி செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இதற்கான வருமான வரித்துறையில் பெரிய மண்டலங்கள் பிரிக்கப்பட்டு இலக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. பெரு நகரங்கள் மட்டுமின்றி சிறிய நகரங்களிலும் கவனம் செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நகரங்கள் அளவிலும் இலக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. வணிகர்கள் ஜிஎஸ்டி கணக்கு தாக்கலில் அளித்த விவரங்கள், புலனாய்வு அமைப்புகள் மூலம் திரட்டப்பட்ட தகவல்கள், வர்த்தகர் சங்கங்கள் என பல்வேறு வகையில் வருமான விவரங்கள் ஆராயப்பட உள்ளன.  பெரு நிறுவனங்கள் மட்டுமின்றி, சிறிய வணிகர்கள், முறைப்படுத்தப்படாத துறைகளிலும் உள்ளூர் பிரமுகர்கள், சங்கங்கள் மூலம் வருவாய் விவரங்கள் திரட்டப்படும். இதை அடிப்படையாக வைத்து வரி ஏய்ப்பு செய்வதற்கு சாத்தியமுள்ளவர்கள் பட்டியல் தயாரிக்கப்படும். இவர்களை வரி செலுத்தவும், வருமான வரி கணக்குதாக்கல் செய்ய வைக்கவும் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இவை முதன்மை தலைமை வரி ஆணையர்கள் மேற்பார்வையில் நடக்கும். முதல் முறையாக ஆண்டு அடிப்படையிலான இந்த இலக்குகள், காலாண்டுக்கு ஒரு முறை ஆய்வு செய்யப்பட்டு, அதற்கேற்ப அடுத்த காலாண்டில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். உயர் மதிப்பிலான பரிவர்த்தனை விவரங்கள் போன்றவை கண்காணிக்கப்படும் என்றனர்.

மூலக்கதை