ஏமாந்து நிற்கிறோம்: தெலுங்கு தேசம் குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
ஏமாந்து நிற்கிறோம்: தெலுங்கு தேசம் குற்றச்சாட்டு

தெலுங்கு தேசம் கட்சியின்  சார்பில் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் அளித்த எம்பி சீனிவாஸ் கேசினேனி, இந்த விவாதத்தை தனது கட்சியை சேர்ந்த எம்பி. ஜெயதேவ் காலா  தொடங்கி வைத்து பேச அனுமதிக்கும்படி சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம்  வேண்டுகோள் விடுத்தார். இதற்கு சபாநாயகர் அனுமதி அளித்தார். இதையடுத்து, காலா பேசியதாவது: ஆந்திராவை  பிரிக்க அறிவியல்பூர்மற்ற மசோதாவை நிறைவேற்றி, பாஜ.வும், காங்கிரசும்  எங்கள் மாநிலத்தை முடக்கி விட்டன. தேர்தல் பிரசாரம் ஒன்றில் பேசிய பிரதமர்  மோடி, ‘குழந்தையை (தெலங்கானா) மட்டும் காப்பாற்றி விட்டு தாயை (ஆந்திரா)  காங்கிரஸ் இறந்து போக விட்டு விட்டது. நான் மட்டும் ஆட்சியில்  இருந்திருந்தால், இரண்டு பேரையும் காப்பாற்றி இருப்பேன்’ என்று  தெரிவித்தார். அவருடைய பேச்சை கேட்டு நாங்கள் மிகவும் உற்சாகம் அடைந்தோம்.  அவரை ஆதரிக்க முடிவு செய்தோம். ஆனால், அவர் ஆட்சிக்கு நான்கு ஆண்டுகள்  ஆகிவிட்ட நிலையிலும், இன்று வரை எதுவுமே நடக்கவில்லை. நாங்கள் ஏமாந்து நிற்கிறோம்.ஆந்திராவுக்கு  சிறப்பு அந்தஸ்து பெறுவதற்கான போராட்டம், ஆந்திர மக்களுக்கும் பாஜ  தலைமையிலான மத்திய அரசுக்கும் இடையிலான தர்ம யுத்தமாக மாறி விட்டது.  இதற்காக, தேர்தலில் பாஜ தோற்கடிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.  உலகத் தரம் வாய்ந்த தலைநகரத்தை ரூ.1,500 கோடியில் உருவாக்கி விட முடியாது.  ஜனநாயக முறையற்ற வகையிலும், அறிவியல்பூர்வமற்ற வகையிலும் ஆந்திரா மாநிலம்  பிரிக்கப்பட்டு விட்டது. ஆந்திரா  மறுசீரமைப்பு மசோதாவை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றம் தகர்க்கப்பட்டு  விட்டது. (இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த தெலங்கானா ராஷ்டிரிய சமிதி  எம்பி.க்கள், அவையின் மையப்பகுதிக்கு வந்து சிறிது நேரம் கோஷமிட்டனர்). இவ்வாறு அவர் பேசினார்.

மூலக்கதை