ரபேல் ஒப்பந்தம், கருப்பு பணம், வேலைவாய்ப்பின்மை பற்றி ராகுல் அனல் பறக்கும் பேச்சு

தினகரன்  தினகரன்
ரபேல் ஒப்பந்தம், கருப்பு பணம், வேலைவாய்ப்பின்மை பற்றி ராகுல் அனல் பறக்கும் பேச்சு

விவாதத்தில் பங்கேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியபோது, பாஜ.வையும் பிரதமர் மோடியையும் கடுமையாக தாக்கிப் பேசினார். அவர் பேசியதாவது: பாஜ,வின் அரசியல் மோசடி ஆயுதத்துக்கு தெலுங்கு தேசம் கட்சியை போல் பல கட்சிகள் பலியாகி உள்ளன. இது, 21ம் நூற்றாண்டின் அரசியல் ஆயுதம். உங்களை போலவே விவசாயிகள், இளைஞர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினர், பெண்கள் என பல தரப்பினர் பாஜ அரசின் இந்த ஆயுதத்தால் பலிக்கடா ஆகி இருக்கின்றனர். குறிப்பிட்ட சிலருடன் பிரதமர் மோடி வைத்துள்ள நட்பு பற்றி எல்லாருக்கும் நன்றாக தெரியும். அவரை பிரபலப்படுத்துவதற்காக எவ்வளவு பணம் செலவு செய்யப்படுகிறது என்பதையும் அனைவரும் அறிவார்கள். இந்த பணத்தை யார் செலவு ெசய்கிறார்கள் என்பதும் தெரியும். அவருக்கு தெரிந்தவர்களில் ஒருவருக்குதான், ரபேல் போர் விமான ஒப்பந்தம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் அவர், ரூ.45 ஆயிரம் கோடி ஆதாயம் அடைந்துள்ளார்.இந்த ஒப்பந்தம் பற்றி பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் பொய் பேசி வருகிறார். இந்த ஒப்பந்த விவகாரத்தில் இந்திய அரசுக்கும் தனது நாட்டுக்கு அரசுக்கும் ரகசிய உடன்பாடு எதுவும் இல்லை என்று பிரான்ஸ் பிரதமர் தனிப்பட்ட முறையில் என்னிடம் கூறியுள்ளார். ஆனால், இது ரகசிய உடன்பாடு என்று நிர்மலா சீதாராமன் கூறி வருகிறார். இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட இந்த ஒப்பந்தம்,  அதனிடம் இருந்து பறிக்கப்பட்டு குறிப்பிட்ட  ஒரு தொழிலதிபரிடம் ஏன் கொடுக்கப்பட்டது என்பதற்கான பதிலை பிரதமர் மோடி அளிக்க வேண்டும்.பாஜ ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியனுக்கும் தலா ரூ.15 லட்சம் வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டது. இதுதான் பாஜ.வின் ‘மோசடி தாக்குதல் நம்பர் ஒன்’. அடுத்து, ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், கடந்த 4 ஆண்டு கால ஆட்சியில் 4 லட்சம் வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பின்மை உச்சக்கட்டத்தை எட்டி இருக்கிறது. இதுதான் பாஜ.வின் ‘மோசடி தாக்குதல் நம்பர் 2’.பெரிய தொழில் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட ரூ.2.5 லட்சம் கோடி கடனை மோடி அரசு ரத்து செய்துள்ளது. ஆனால், விவசாயிகளுக்கு கடன் ரத்து செய்வதற்கு அது மறுக்கிறது. மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்காக இதுவரை பல ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது. ஆனால், சீனாவுக்கு அவர் திட்டமில்லா பயணம் சென்றபோது டோக்லாம் எல்லை பிரச்னையை பற்றி பேசவில்லை. இவ்வாறு ராகுல் பேசினார். ராகுல் அளித்த அதிர்ச்சி: நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து பேசிய ராகுல், பாஜ.வையும், மோடியையும் கடுமையாக தாக்கி பேசினார். அவையில் அமர்ந்திருந்த மோடி, அதை அமைதியாக கவனித்து கொண்ருந்தார். தனது பேச்சை முடிக்கும் தருவாயில், ராகுல் திடீரென பிரதமர் மோடியை நோக்கி வந்தார். அவரை கட்டிப்பிடித்தார். மோடி இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. என்ன நடக்கிறது என்பது தெரியாமல் சிறிது நேரம் அப்படியே சிலை போல் அமர்ந்திருந்தார். அவரை கட்டிப்பிடித்த பிறகு ராகுலும் தனது இருக்கையை நோக்கி நடந்தார். சில நொடிகளில் சுதாரித்துக் கொண்ட மோடி, ராகுலை மீண்டும் அழைத்து அவரை கட்டிப்பிடித்து முதுகில் தட்டிக் கொடுத்தார். அப்போது இருவரும் ஒரு சில வார்த்தைகளை பரிமாறிக் கொண்டனர். அது, யார் காதிலும் சரியாக விழவில்லை. மோடியின் பின்னால் அமர்ந்திருந்த பாஜ தலைவர்கள் வாயை பிளந்தபடி இந்த காட்சியை பார்த்து கொண்டிருந்தனர். மோடியும், ராகுலும் கட்டிப்பிடித்ததை அவையில் இருந்த சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்களும், காங்கிரஸ் உறுப்பினர்களும் பலத்த கரகோஷம் செய்து வரவேற்றனர்.பின்னர் தனது இருக்கைக்கு திரும்பிய ராகுல், ‘‘இந்து என்பதற்கான சரியான அர்த்தம் இதுதான். உண்மையான காங்கிரஸ்காரன், உண்மையான இந்தியன், உண்மையான இந்து என்பதற்கான அர்த்தத்தை பிரதமர் மோடியும், பாஜ.வும் எனக்கு கற்று கொடுத்ததற்கு நன்றி. பாஜ,வும், மோடியும் என்னை வெறுக்கலாம். என்னை குழந்தை என்று அழைக்கலாம். அதற்காக நான் அவர்கள் மீது கோபப்பட மாட்டேன். வெறுக்கவும் மாட்டேன்.’’ என்று கூறி தனது பேச்சை நிறைவு செய்தார். மோடி காவலாளி அல்ல ஊழலுக்கு கூட்டாளி:ராகுல் பேசும் போது கூறியதாவது: ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான தகவல்களை வெளிப்படையாக அளிக்க மறுக்கிறது. கேட்டால் பிரான்சுடன் பாதுகாப்பு தொடர்பான ரகசிய ஒப்பந்தம் என்று கூறி வருகிறது. பிரதமர் மோடி அவையில் சிரித்தபடி இருக்கிறார். ஆனால் அவரது சிரிப்பில் ஒரு பதற்றம் தெரிகிறது. அவர் வேறு எங்கோ பார்க்கிறார். என் கண்ணை நேருக்கு நேர் சந்திக்க அவர் மறுக்கிறார். அவர் காவலாளி அல்ல. தவறு செய்யும் நபர்களின் கூட்டாளி. ஏனெனில் தனிப்பட்ட முறையில் பிரான்ஸ் அதிபரை நான் சந்தித்து ரபேல் ஒப்பந்தம் குறித்து கேட்டேன். அப்போது ரூ.58 ஆயிரம் கோடி மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இதுகுறித்த தகவல்களை வெளிப்படையாக அறிவிப்பதில் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை என்று குறிப்பிட்டார். இதுதான் உண்மை. இந்த உண்மையை நீங்கள் இந்தியா முழுவதும் கூறலாம் என்று குறிப்பிட்டார். எனவே பிரதமர் கொடுக்கும் அழுத்தம் காரணமாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பொய் கூறுகிறார். நீங்கள் யாருக்கு உதவுகிறீர்கள்? யார் பயனடைய இந்த உதவியை செய்கிறீர்கள் என்பதை நிர்மலா சீத்தாராமன், பிரதமர் மோடி ஆகியோர் நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.  இவ்வாறு பேசினார்.நிர்மலா ஆவேச பதில்ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொய் கூறுவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். அப்போது குறுக்கிட்ட நிர்மலா சீதாராமன், தன் மீதான குற்றச்சாட்டை மறுத்து ஆவேசமாக பதிலளித்தார். அவர் கூறுகையில், ‘‘ரபேல் போர் விமான ஒப்பந்தம் கடந்த 2008ல் ஐமு கூட்டணி ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருக்க வேண்டுமென்பது ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாகும். அதற்கு ஒப்புக் கொண்டு அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி பிரான்ஸ் அரசுடன் கையெழுத்திட்டுள்ளார். பிரான்ஸ் அதிபர், ராகுலிடம் தனிப்பட்ட முறையில் என்ன கூறினார் என்பது தெரியாது. ஆனால் பிரான்ஸ் அதிபர் இந்திய டிவி சேனல்களுக்கு அளித்த பேட்டியில், ஒப்பந்த விவரங்கள் ரகசியமானது என்றும் அதை வெளியிட முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே ராகுல் கூறுவதில் உண்மையில்லை. ஆதாரமுமில்லை’’ எனக் கூறி ஒப்பந்த நகல்களை அவையில் காட்டினார் நிர்மலா. இதன் காரணமாக சிறிது நேரம் அமளி ஏற்பட்டது.

மூலக்கதை