மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி : ராகுல் ஆவேச பேச்சு, மோடி பதிலடி

தினகரன்  தினகரன்
மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி : ராகுல் ஆவேச பேச்சு, மோடி பதிலடி

புதுடெல்லி: மத்திய பாஜ அரசு மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. அரசுக்கு ஆதரவாக 325 எம்பிக்களும், எதிராக 126 எம்பிக்களும் வாக்களித்தனர். பிஜு ஜனதா தளம், சிவசேனா கட்சிகள் வெளிநடப்பு செய்தன. விவாதத்தில் ராகுல் ஆற்றிய உரையில் அனல் பறந்தது. அவருடைய பேச்சுக்கு பிரதமர் மோடி ஆவேசமாக பதிலடி கொடுத்தார்.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 18ம் தேதி தொடங்கியது. இதில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க மத்திய அரசு மறுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் கொடுத்தது. இதேபோல், பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்பி.க்களும் இந்த தீர்மான நோட்டீசை அளித்தனர். கடந்த நாடாளுமன்ற தொடரிலும் தெலுங்கு தேசம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. ஆனால், அவையில் அப்போது தொடர்ந்து அமளி நடந்ததால் சபாநாயகர் சுமித்ரா மகாஜன், இத்தீர்மானத்தை விவாதத்துக்கு கொண்டு வரவில்லை. அதோடு, அந்த தொடரும் முடிந்தது.இந்த தொடரில் கொடுக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உடனடியாக விவாதத்துக்கு ஏற்றார். இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 50க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி எம்பி.க்கள் ஆதரவு கொடுத்தனர். இந்த தீர்மானத்தின் மீது 20ம் தேதி நண்பகல் 11 மணிக்கு விவாதம் தொடங்கும் என்றும், அன்று மாலையே வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் நேற்று முன்தினம் சபாநாயகர் அறிவித்தார். அதன்படி, நேற்று நண்பகல் 11 மணிக்கு தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது. நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொடுத்த தெலுங்கு தேசம் கட்சி எம்பி.யான சீனிவாஸ் கேசினேனி, தீர்மானத்தின் மீதான விவாதத்தை தங்கள் கட்சியை சேர்ந்த எம்பி ஜெயதேவ் காலா தொடங்கி வைக்க அனுமதிக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். இதை சபாநாயகர் ஏற்றதை தொடர்ந்து, காலா பேசினார். இதைத் தொடர்ந்து, பல்வேறு கட்சித் தலைவர்கள் தங்கள் கருத்துகளை எடுத்து வைத்தனர். விவாதம் தொடங்குவதற்கு முன்பாக சிவசேனாவும், பிஜு ஜனதா தளமும் வெளிநடப்பு செய்தன.பின்னர், காங்கிரஸ் தலைவர் ராகுல் பேசியபோது அவையில் அனல் பறந்தது. பிரான்ஸ் நாட்டுடன் செய்யப்பட்ட ரபேல் போர் விமான ஒப்பந்தம், வேலைவாய்ப்பின்மை, கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியருக்கும் ரூ.15 லட்சம் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தது உட்பட பல்வேறு பிரச்னைகளை தனது பேச்சில் ராகுல் குறிப்பிட்டார். அப்போது, பாஜ.வையும் பிரதமர் மோடியையும் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். அவருடைய பேச்சுக்கு பாஜ தலைவர்கள், எம்பி.க்கள் அடிக்கடி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் ஏற்பட்ட சலசலப்பு காரணமாக, அடிக்கடி குறுக்கீடுகள் ஏற்பட்டு 15 நிமிடங்கள் அவை ஒத்திவைக்கப்பட்டது. தனது பேச்சின் உச்சக்கட்டமாக, உரையை முடிக்கும் முன்பாக பிரதமர் மோடியை ராகுல் திடீரென சென்று கட்டிப்பிடித்தார். இதனால், அவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அவருடைய செயலை சபாநாயகர் கடுமையாக கண்டித்தார். ராகுல் கட்டிப்பிடித்த போது சிறிது நேரம் திகைத்த மோடியும், பின்னர் சுதாரித்துக் கொண்டார். ராகுலை மீண்டும் அழைத்து கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்தார்.நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் பகல் 11 மணி முதல் மாலை வரை நீடித்தது. பின்னர், விவாதத்துக்கு பிரதமர் மோடி பதில் அளிப்பதற்காக மக்களவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது. விவாதத்தின்போது எதிர்க்கட்சிகள் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு மோடி தனது உரையில் ஆவேசமாக பதிலளித்தார். ரேபேல் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டிய ராகுலை பார்த்து, ‘நாங்களா நாட்டின் பாதுகாப்பில் விளையாடுகிறோம்?’ என்று ஆவேசமாக கேட்டார். மோடியின் பதிலுரைக்கு பிறகு, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்ெகடுப்பு நடத்தப்பட்டது. குரல் ஓட்டெடுப்பில் தீர்மானம் தோல்வி அடைந்தது. இதை தொடர்ந்து நடந்த  எலக்ட்ரானிக் ஓட்டெடுப்பில் தீர்மானத் துக்கு ஆதரவாக 126 எம்பிக்களும் எதிராக 325 எம்பிக்களும் வாக்களித்தனர். இதையடுத்து மோடி அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததாக மக்களவை சபா நாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.

மூலக்கதை