டன் 2,050 என 6 வாரத்தில் மலேசிய இறக்குமதி மணலை தமிழகஅரசு வாங்க வேண்டும் : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தினகரன்  தினகரன்
டன் 2,050 என 6 வாரத்தில் மலேசிய இறக்குமதி மணலை தமிழகஅரசு வாங்க வேண்டும் : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி:    மலேசியாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள 55 ஆயிரம் டன் மணலை 2ஆயிரத்து 50க்கு ஒரு டன் என 6 வாரத்தில் தமிழக அரசு வாங்கிக்கொண்டு அதற்கான தொகையை நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி லோகூர் அமர்வு உத்தரவிட்டுள்ளது.  மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு தூத்துக்குடி துறைமுகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள 55ஆயிரம் டன் மணலை லாரிகளில் எடுத்துச்சென்று தமிழகம் முழுவதும் விற்க அனுமதி வழங்கக்கோரி புதுக்கோட்டையை சேர்ந்த ராமையா நிறுவனம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தது.  இதையடுத்து நீதிமன்ற உத்தரவில், ‘தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதத்தில் மூட வேண்டும், புதிய மணல் குவாரிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது, ஜல்லியை தவிர்த்து கிரானைட் குவாரிகளையும் மூட வேண்டும்’ என தனி நீதிபதி வழங்கிய உத்தரவையே பின்னர் உயர் நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வும் உறுதி செய்தது. உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றம், ராமையா நிறுவனம் மற்றும் தமிழக அரசு ஆகிய இருவரும் புதிதாக உருவாக்கப்பட்ட குழுவின் மூலம் ஆலோசனை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என கடந்த 9ம் தேதி உத்தரவிட்டது. இந்நிலையில் மேற்கண்ட மனு உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி லோகூர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதத்தில், “ராமையா நிறுவனத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ள மணல் விலை நிர்ணயம் அதிகமாக உள்ளது. அந்த அளவிற்கு விலை கொடுத்து எங்களால் வாங்க முடியாது’’ எனக்கூறி குழு ஆலோசனையில் எடுக்கப்பட்ட அறிக்கையை தாக்கல் செய்தார். இதற்கு மணல் நிறுவனத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துருமேத்தா கடும் ஆட்சேபனை தெரிவித்தார். இதை தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “மலேசியாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள மணலை தமிழக அரசு டன் ஒன்றுக்கு 2ஆயிரத்து 50 வீதம் அனைத்து மணலையும் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் 6 வாரத்திற்குள் அனைத்து மணலையும் விற்பனை செய்து நிறுவனத்திடம் மொத்த தொகையை வழங்கிட வேண்டும். மேலும் அதற்கான ஜிஎஸ்டி வரியையும் மாநில அரசே கட்டிட வேண்டும். அதேபோல் இன்று முதல் தூத்துக்குடி துறைமுகத்தில் மணல் இருக்கும் இடத்திற்கான வாடகையை தமிழக அரசே கட்டிக்கொள்ள வேண்டும். இதைதவிர மணல் இறக்குமதி விவகாரத்தில் ராமையா நிறுவனம் இதுவரை கட்டி வந்த தரை வாடகை குறித்து தனியாக மனு தாக்கல் செய்தால் அதுகுறித்து விசாரணை நடத்தப்படும்’’ என உத்தரவிட்டார்.

மூலக்கதை