டாஸ்மாக் வழக்கு உச்சநீதிமன்றத்தில் முடித்து வைப்பு

தினகரன்  தினகரன்
டாஸ்மாக் வழக்கு உச்சநீதிமன்றத்தில் முடித்து வைப்பு

புதுடெல்லி:  டாஸ்மாக் மதுபானக் கடைகள் தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசின் அரசாணையை ஏற்றுக்கொள்வதாக அறிவித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா நேற்று அதுகுறித்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்த வழக்கு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மாநில நெடுஞ்சாலைகளை நகராட்சி சாலைகளாக மாற்றி முறையான அறிவிப்பை வெளியிட்ட பின்னர் டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறந்து கொள்ளலாம். இந்த உத்தரவு அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என உத்தரவிட்டது. தமிழக அரசு எந்தவித அறிவிப்பும் இல்லாமல் பல இடங்களில் மதுபான கடைகளை திறந்தது. இதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்து முறையாக அறிவிக்கப்படாத சாலைகளுக்கு அருகே உள்ள மதுபானக் கடைகளை திறக்க தடை விதித்து கடைகளை மூடவும் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, தமிழகத்தில் 1,300 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. டாஸ்மாக் கடை விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கறிஞர் கே.பாலுவும் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மே 23ம் தேதி விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தரப்பில் ஒரு அரசாணை தாக்கல் செய்யப்பட்டது. அதில், “உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்து முறையாக அறிவிக்கப்படாத சாலைகள் என்பது கண்டறியப்பட்டது. மேலும் பள்ளி, மருத்துவமனை  மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக மற்றும் சாலையில் இருந்து எவ்வளவு தூரத்தில் டாஸ்மாக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டு விட்டது. ஆனால் அதுபோல் எந்த கடைகளும் கிடையாது. மேலும் ஏதேனும் கடைகள் இருப்பது கண்டறியப்பட்டால் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அது நடைமுறைப்படுத்தப்படும்’’ என தெரிவிக்கப்பட்டது. எனவே, ஆய்வு செய்து முடிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் சுமார் 810க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது. மேற்கண்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஏற்கனவே அரசாணை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிபதிகள் முன்னிலையில் தெரிவிக்கப்பட்டது.“தமிழகத்தில் 1,300 டாஸ்மாக் கடைகளை திறப்பது தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள அரசாணையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது’’ என தெரிவித்த தலைமை நீதிபதி, அதுகுறித்த வழக்கை முடித்து வைத்து நேற்று உத்தரவிட்டார்.

மூலக்கதை