முல்லை பெரியாறில் வாகனம் நிறுத்தும் விவகாரம் 4 வாரத்தில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் : உச்ச நீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
முல்லை பெரியாறில் வாகனம் நிறுத்தும் விவகாரம் 4 வாரத்தில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் : உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: முல்லை பெரியாறு அணைப் பகுதியில் வாகன நிறுத்துமிடம் கட்டுவது தொடர்பாக கேரள அரசு தாக்கல் செய்துள்ள மனுவிற்கு தமிழக அரசு அடுத்த 4 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முல்லை பெரியாறு அணைக்கட்டு பகுதியில் 2 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்தம் கட்டுவதற்காக கேரள அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதை எதிர்த்து தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் கேரளாவை சேர்ந்த தங்கப்பன், ஆபிரகாம் ஆகியோர் வழக்கு தாக்கல் செய்தனர். தமிழக அரசும்  இந்த வழக்கில் மனுதாரராக இணைந்தது. அது தாக்கல் செய்த மனுவில்,  ‘கேரள அரசு  வாகன நிறுத்தம் அமைப்பதற்காக தேர்வு செய்துள்ள இடம், தேக்கடி வனப்பகுதியை சேர்ந்தது. இதனால், அங்கு கார் பார்க்கிங் அமைத்தால் வனவிலங்கு மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்புகள் ஏற்படும். இதைத்தவிர மேற்கண்ட இடம் தமிழக அரசுக்கு சொந்தமான வனப்பகுதி என்பதோடு அந்த இடம் முல்லை பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியாகவும் உள்ளது’ என கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த தென்மண்டல தீர்பாயத்தின் இரண்டு உறுப்பினர்கள் கொண்ட அமர்வு, முல்லை பெரியாறு அணை பகுதியில் கேரள அரசு வாகன நிறுத்தம் கட்டிக்கொள்ள அனுமதி வழங்கியது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்கு நிலுவையில் உள்ளது. கடந்த 10ம் தேதி வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஜூலை 20ம் தேதி விசாரிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது. மேற்கண்ட வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏகே.சிக்ரி மற்றும் அசோக் பூஷண் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை விரைவாக விசாரிக்கும்படி தமிழக அரசு வலியுறுத்தியது. அப்போது, இந்த மனுவுக்கு கேரள அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “முல்லை பெரியாறு பகுதியில் வாகன நிறுத்தம் கட்டுவது தொடர்பான வழக்கில் கேரள அரசு தாக்கல் செய்துள்ள மனுவுக்கு தமிழக அரசு 4 வாரத்தில் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.

மூலக்கதை