வட இந்தியர்களின் வருகையால் தமிழர்களுக்கு பாதிப்பு : இயக்குனர் யுரேகா பேச்சு

தினமலர்  தினமலர்
வட இந்தியர்களின் வருகையால் தமிழர்களுக்கு பாதிப்பு : இயக்குனர் யுரேகா பேச்சு

மதுரை சம்பவம், தொப்பி, சிகப்பு எனக்கு பிடிக்கும் படங்களை இயக்கியவர் யுரேகா. தற்போது காட்டுப்பய சார் இந்த காளி என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படம் ஆகஸ்ட் 3-ந்தேதி திரைக்கு வருகிறது.

ஜெய்வந்த் நாயகனாக நடித்து, தயாரித்துள்ளார். அவருடன் ஐரா, ஆடுகளம் நரேன், மூணாறு ரமேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். விஜய் சங்கர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பிரஸ்மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது.

அப்போது இயக்குனர் யுரேகா பேசுகையில், எனது எல்லா படங்களிலுமே சமூகம் சார்ந்த விசயங்களைத்தான் படமாக்கி வருகிறேன். அந்த வகையில், சிகப்பு எனக்கு பிடிக்கும் படத்தில் சென்னைக்கு ஒரு சிகப்பு விளக்கு பகுதி வேண்டும் என்று சொன்னேன். அதை பலரும் கிண்டல் செய்தார்கள்.

நான் எதற்காக அப்படி சென்னேன் என்றால், இன்றைக்கு வட இந்தியாவில் இருந்து வேலை தேடி கூட்டம் கூட்டமாக தமிழ்நாட்டை நோக்கி வருகிறார்கள். அதுபோன்ற நபர்களால் பாலியல் குற்றங்கள் நடக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால் தான் மும்பை, கோல்கட்டாவில் இருப்பது போன்று சென்னையிலும் சிகப்பு விளக்கு ஏரியா வேண்டும் என்று சொன்னேன்.

அதேபோல் தான் இப்போது இயக்கியுள்ள காட்டுப்பய சார் இந்த காளி படத்திலும் வட இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை நோக்கி வருபவர்களால் ஏற்படும் ஒரு பிரச்சினையைப்பற்றி சொல்லியிருக்கிறேன்.

இந்த படத்தில் ஜெய்வந்த் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்பட நாயகி ஐரா நடித்துள்ள வேடத்தில் நடிக்க எந்த நடிகையும் ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால் ஐரா தைரியமாக நடித்துள்ளார்.

அதேபோல் கவிஞர் கண்ணதாசனின் பேரன் முத்தையா கண்ணதாசனும் இந்த படத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்திருக்கிறார். ஆகஸ்ட் 3-ந்தேதி திரைக்கு வரும் இந்த படம் தமிழர்களுக்கான ஒரு படமாக இருக்கும் என்கிறார் இயக்குனர் யுரேகா.

மூலக்கதை