வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற...தேவை, வேகம்! அரசு அதிகாரிகளுக்கு அறிவுரை

தினமலர்  தினமலர்
வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற...தேவை, வேகம்! அரசு அதிகாரிகளுக்கு அறிவுரை

கோவை நகருக்கு அறிவித்துள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை வேகமாக நிறைவேற்ற, அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, கோவை நகருக்கு, சமீபமாக, பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள், மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டு வருகின்றன. விமான நிலைய விரிவாக்கம், மேற்கு புறவழிச்சாலை, கரூர்-கோவை புறவழிச்சாலை, மெட்ரோ ரயில், அவிநாசி ரோடு மேம்பாலம், திருச்சி ரோட்டில் 3 மேம்பாலங்கள், லாரிப்பேட்டை, பஸ் போர்ட், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குளங்கள் மேம்பாடு என இந்த அறிவிப்புகளின் பட்டியல் வெகுநீளமாகி வருகிறது.காந்திபுரம், உக்கடம் மேம்பாலங்கள் கட்டும் பணி மட்டுமே, தற்போது நடந்து வருகிறது; அவற்றின் வடிவமைப்பு குறித்தும், பெரும் சர்ச்சைகள் தொடர்கின்றன. குளங்கள் மேம்பாடு திட்டப்பணி, சமீபத்தில் துவக்கப்பட்டுள்ளது. ஆனால், விரிவாக்கப் பகுதிகளுக்கான பாதாள சாக்கடைத் திட்டம், மழை நீர் வடிகால் திட்டம், சங்கனுார் பள்ளத்தின் மீது அரை வட்டச்சாலை அமைப்பது, கட்டடக் கழிவு மறுசுழற்சி போன்ற திட்டங்களின் நிலை என்னவென்றே தெரியவில்லை.
எந்தெந்த திட்டங்கள், என்னென்ன நிலையில் உள்ளன என்பது பற்றி, அவ்வப்போது ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, பணிகளை முடுக்கிவிட வேண்டிய அதிகாரிகள், அதில் அக்கறை காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது; வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் வேகமாக நடக்க வேண்டுமென்பதில், அமைச்சர் வேலுமணி அதிக அக்கறை காட்டினாலும், அவரது வேகத்துக்கு இங்குள்ள அதிகாரிகள் ஈடுகொடுப்பதில்லை என்று ஆளுங்கட்சி நிர்வாகிகள் குமுறுகின்றனர்.
இதற்கேற்ப, சுற்றுலா மாளிகை ஆய்வு அரங்கில், அதிகாரிகளின் சிறப்பு கூட்டத்தைக் கூட்டிய அமைச்சர், பெரும்பாலான திட்டங்கள் அறிவிப்பாகவே இருப்பது குறித்து, தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். பணிகளை வேகப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்திய அவர், 'ஒவ்வொரு திட்டத்தின் நிலை குறித்தும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மாதந்தோறும் அறிக்கை தர வேண்டும்' என்று உத்தரவிட்டுள்ளார்.
கோவைக்கென ஒவ்வொரு திட்டத்தையும், கஷ்டப்பட்டு வாங்குவது பற்றிக் குறிப்பிட்டு, அனைத்து திட்டங்களையும் வேகமாக நிறைவேற்ற அதிகாரிகள் கூடுதலாக உழைக்க, கேட்டுக்கொண்டுள்ளார். அறிவித்த திட்டங்களை நிறைவேற்ற ஆர்வமாகவுள்ள அரசு, திறமையான அதிகாரிகளை நியமிக்க வேண்டுமென்பதே, மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. -நமது நிருபர்-

மூலக்கதை