வெள்ளை மாளிகை தகவல் அமெரிக்கா வருமாறு புடினை அழைக்க அதிபர் டிரம்ப் விருப்பம்

தினகரன்  தினகரன்
வெள்ளை மாளிகை தகவல் அமெரிக்கா வருமாறு புடினை அழைக்க அதிபர் டிரம்ப் விருப்பம்

வாஷிங்டன்: பின்லாந்தில் நடந்த சந்திப்பைத் தொடர்ந்து, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை அமெரிக்காவுக்கு வருமாறு அதிபர் டெனால்ட் டிரம்ப் அழைப்பு விடுக்க இருப்பதாக வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. எதிரும் புதிருமாக இருந்த அமெரிக்காவும், ரஷ்யாவும் நெருக்கமாகி உள்ளன. சமீபத்தில், பின்லாந்தின் ஹெல்சின்கியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷ்ய அதிபர் புடின் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். வரலாற்று சிறப்பு மிக்க இந்த சந்திப்பு வெற்றிகரமாக நடந்ததாக இரு தலைவர்களும் கூட்டாக பேட்டி அளித்தனர். இதைத்தொடர்ந்து, புடினை அமெரிக்கா வருமாறு அழைப்பு விடுக்க அதிபர் டிரம்ப் ஆர்வமாக இருப்பதாக வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் நேற்று தனது டிவிட்டரில், ‘‘இந்த ஆண்டு இறுதியில், ரஷ்ய அதிபர் புடினை அமெரிக்கா வருமாறு முறைப்படி அழைப்பு விடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனை அதிபர் டிரம்ப் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே தொடங்கி விட்டன’’ என தெரிவித்துள்ளார். ஹெல்சின்கியில் நடந்த டிரம்ப்-புடின் சந்திப்பை அமெரிக்காவின் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது குறித்து அதிபர் டிரம்ப் தனது டிவிட்டரில், ‘‘மக்கள் விரோத சக்திகளான பொய் செய்தி மீடியாக்களை தவிர மற்ற அனைவருக்கும் ரஷ்யா உடனான சந்திப்பு மாபெரும் வெற்றி தான். 2வது சந்திப்பை ஆவலோடு எதிர்நோக்கி உள்ளேன். தீவிரவாதத்தை ஒழிப்பது, இஸ்ரேல் பாதுகாப்பு, அணுஆயுத பரவல் தடை, சைபர் தாக்குதல், வர்த்தகம், உக்ரைன் போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து முதல் சந்திப்பில் பேசியவற்றை செயல்படுத்த 2வது சந்திப்பு அவசியம்’’ என கூறி உள்ளார்.சீன பொருட்கள் அனைத்துக்கும் வரி: டிரம்ப் மிரட்டல்அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப்போர்  தொடர்ந்து உச்சம் அடைந்து வருகிறது. அமெரிக்கான வர்த்தக பற்றாக்குறையை ஈடுகட்டவும், தனது நாட்டு தொழில்களை பாதுகாக்கவும் வரி விதிப்பதற்கு பதிலடியாக சீனாவும் வரி விதித்து வருகிறது. இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று பேட்டியளித்த டிரம்ப், தேவைப்பட்டால், சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் வரி விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அமெரிக்காவுக்கு 50,550 கோடி டாலர் மதிப்பிலான சீன பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் இவை அனைத்துக்கம் வரி விதிக்க தயாராக இருக்கிறேன். அரசியலுக்காக அல்ல, எனது நாட்டுக்காகத்தான் இநறத் வரி விதிப்பு. நீண்ட காலமாகவே அமெரிக்காவால் சீன நிறைய பலன்களை அடைந்துள்ளது என டிரம்ப் கூறியுள்ளார்.

மூலக்கதை