ஊழல், முறைகேடு குற்றச்சாட்டில் தென்கொரிய முன்னாள் அதிபருக்கு 8 ஆண்டு கூடுதல் சிறை தண்டனை

தினகரன்  தினகரன்
ஊழல், முறைகேடு குற்றச்சாட்டில் தென்கொரிய முன்னாள் அதிபருக்கு 8 ஆண்டு கூடுதல் சிறை தண்டனை

சியோல் : ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய தென்கொரியாவின் முன்னாள் அதிபர் பார்க் கியூன் ஹேவிற்கு மற்றொரு வழக்கில் கூடுதலாக 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தென்கொரியாவின் முன்னாள் அதிபர் பார்க் கியூன் ஹே. நாட்டின் முதல் பெண் அதிபரான இவர், 1979ல் இவருடைய தந்தை படுகொலை செய்யப்பட்ட பின்பு, தனிமைப்படுத்தப்பட்டார். அப்பொழுது சோய் சூன் சில் என்பவருடன் நட்பு கொண்டார். பார்க்கின் அரசியல்வாழ்க்கையில் ஆலோசகராக செயல்பட்ட சோய், அவர் அதிபராக இருந்த பொழுது, அரசியல் விவகாரங்களில் தலையிட ஆரம்பித்தார். சாம்சங், லோட்டே உள்ளிட்ட நிறுவனங்களிடம் இருந்து அவர் கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சம் பெற்றதாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இதுதொடர்பாக முன்னாள் அதிபர் பார்க்மீது வழக்கு தொடரப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதத்தில் 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனிடையே தேசிய புலனாய்வு மையத்திடம் இருந்து 2.9 மில்லியன் அமெரிக்க டாலர் பெற்று செலவழித்தற்காக 6 ஆண்டு சிறை தண்டனையும், மற்றும் கடந்த 2016ல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நியமனத்தில் தலையிட்ட குற்றத்துக்காக 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து அவருக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைதண்டனை 32 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது. அவருடைய தோழி சோய் சூனுக்கு 20 ஆண்டுகாலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இந்த ஊழல் மூலம் நாட்டின் கருவூலத்திற்கு பார்க், மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக மூத்த நீதிபதி சியோங் சாங்-ஹோ குற்றம் சாட்டியுள்ளார்.

மூலக்கதை