'நெகிழ' வைக்கும் 'பசங்க!''நெகிழி இல்லா திருப்பூராக' மாற்ற மாணவர் உறுதி 49 பள்ளிகளில், 'டிரீம்- 20' குழுவினர் அசத்தல்

தினமலர்  தினமலர்
நெகிழ வைக்கும் பசங்க!நெகிழி இல்லா திருப்பூராக மாற்ற மாணவர் உறுதி 49 பள்ளிகளில், டிரீம் 20 குழுவினர் அசத்தல்

திருப்பூர்:'நெகிழி இல்லா திருப்பூர்' என்ற, பிளாஸ்டிக் மற்றும் பாலிதீனுக்கு எதிரான திட்டம், திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் உள்ள, 49 பள்ளிகளில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.'டிரீம் -20' பசுமை அமைப்பு, மரக்கன்று நட்டு வளர்ப்பதுடன், இயற்கைக்கும், மனிதர்களுக்கும் எதிராக உள்ள, பாலிதீனுக்கு முடிவு கட்டும் நோக்குடன், மாநகராட்சியுடன் இணைந்து, 'நெகிழி இல்லா திருப்பூர்' என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, 'பிளாஸ்டிக்' பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கி, பயன்பாட்டை கைவிட வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், 'எமது பள்ளி, நெகிழி இல்லா பள்ளி' என்று உறுதிமொழி எடுக்கின்றனர்.பள்ளி மாணவர்கள், வீடுகளில் சேரும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து, பள்ளியில் வைக்கின்றனர். பள்ளியில் சேரும் பாலிதீன் மூட்டையை, 'நெகிழி இல்லா திருப்பூர்' குழுவினர் சேகரித்து, மாநகராட்சி வசம் ஒப்படைக்கின்றனர். இத்திட்டம், 2017 ஆக., 15ல், துவங்கப்பட்டது.நேற்று, திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, முருகப்ப செட்டியார் பள்ளியில், 'எமது பள்ளி- நெகிழி இல்லா பள்ளி' என, மாணவர்களும், ஆசிரியர்களும் உறுதிமொழி ஏற்றனர். அருகில் உள்ள, மக்களுக்கும், கடைகளிலும், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திட்டக்குழுவினர் கூறியதாவது:
இதுவரை, 49 பள்ளிகளில், 30 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 'நெகிழி இல்லாத திருப்பூர்' திட்ட பணிகளை கவனிக்க, மாணவர் பிரதிநிதியும், ஆசிரியர்களும் தாங்களாக முன்வந்துள்ளனர்.
பள்ளிகள் மட்டுமல்லாது, கலெக்டர் அலுவலகம், காங்கயம் மற்றும் வடக்கு தாலுகா அலுவலகம், சப்- கலெக்டர் அலுவலகங்களிலும், 'பிளாஸ்டிக்' ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்து வருகிறது. அலுவலகங்களில், பாலிதீன் கவர்களை பறிமுதல் செய்து, இலவச துணிப்பை வழங்கப்படுகிறது. இனி, வாரந்தோறும், கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் பொதுமக்கள் குறைகேட்பு நாளில், இலவச துணிப்பை வழங்கவும் திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

மூலக்கதை