மகளிர் உலக கோப்பை ஹாக்கி லண்டனில் இன்று கோலாகல தொடக்கம் : மாலை 6.30க்கு இங்கிலாந்து - இந்தியா மோதல்

தினகரன்  தினகரன்
மகளிர் உலக கோப்பை ஹாக்கி லண்டனில் இன்று கோலாகல தொடக்கம் : மாலை 6.30க்கு இங்கிலாந்து  இந்தியா மோதல்

லண்டன்: மகளிர் உலக கோப்பை ஹாக்கி போட்டித் தொடர் லண்டனில் இன்று தொடங்குகிறது. பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, தனது முதல் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியுடன் மோதுகிறது. லண்டன், லீ வாலி ஹாக்கி மற்றும் டென்னிஸ் மையத்தில் இன்று தொடங்கி ஆகஸ்ட் 5ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடரில், மொத்தம் 16 அணிகள் 4 பிரிவுகளாக லீக் சுற்றில் மோதுகின்றன. பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, தனது முதல் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை இன்று சந்திக்கிறது. இப்போட்டி மாலை 6.30க்கு தொடங்குகிறது. ஜெர்மனி - தென் ஆப்ரிக்கா மோதும் தொடக்க லீக் ஆட்டம் மாலை 4.30க்கு தொடங்கும். இந்தியா தனது 2வது லீக் ஆட்டத்தில் ஜூலை 26ம் தேதி அயர்லாந்து அணியையும், 3வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் ஜூலை 29ம் தேதி அமெரிக்காவையும் எதிர்கொள்கிறது. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தைப் பிடிக்கும் அணிகள் நேரடியாக கால் இறுதிக்கு முன்னேறும். 2வது மற்றும் 3வது இடத்தை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றில் விளையாடி கால் இறுதிக்கு முன்னேற வேண்டும்.கால் இறுதி ஆட்டங்கள் ஆகஸ்ட் 1, 2 தேதிகளிலும், அரை இறுதி ஆட்டங்கள் ஆகஸ்ட் 4ம் தேதியும் நடைபெறும். 3வது இடத்துக்கான மோதல் மற்றும் இறுதிப் போட்டி ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெற உள்ளது. ராணி ராம்பால் தலைமையிலான இந்திய அணி, முதல் முறையாக உலக கோப்பையில் பதக்கம் வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறது. உலக தரவரிசையில் 10வது இடத்தில் இருக்கும் இந்தியா, லீக் சுற்றில் 2வது ரேங்க் அணியான இங்கிலாந்து, 7வது இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் நெருக்கடியை சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அயர்லாந்து அணியையும் (16வது ரேங்க்) அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது என்பதால், ஒவ்வொரு ஆட்டமுமே இந்திய அணிக்கு சவாலாக இருக்கும். முன்னணி அணிகள் மோதும் இந்த தொடர், ஹாக்கி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.

மூலக்கதை