பகார் ஸமான் 210* பாகிஸ்தான் அபாரம்

தினகரன்  தினகரன்
பகார் ஸமான் 210* பாகிஸ்தான் அபாரம்

புலவாயோ: ஜிம்பாப்வே அணியுடனான 4வது ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் அணி 244 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. தொடக்க வீரர் பகார் ஸமான் ஆட்டமிழக்காமல் 210 ரன் விளாசி சாதனை படைத்தார். ஜிம்பாப்வே சென்றுள்ள பாகிஸ்தான் அணி முதலில் நடந்த முத்தரப்பு டி20 தொடரின் பைனலில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. அடுத்து ஜிம்பாப்வே அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதி வருகிறது. ஹாட்ரிக் வெற்றியுடன் பாகிஸ்தான் தொடரை கைப்பற்றிய நிலையில், 4வது போட்டி புலவாயோவில் நேற்று நடந்தது. டாசில் வென்று பேட் செய்த பாகிஸ்தான் 50 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 399 ரன் குவித்தது. இமாம் உல் ஹக் - பகார் ஸமான் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 304 ரன் சேர்த்து சாதனை படைத்தது. இது ஒருநாள் போட்டி வரலாற்றில் தொடக்க ஜோடியின் 4வது அதிகபட்ச ரன் குவிப்பாக அமைந்தது. முன்னதாக வெஸ்ட் இண்டீசின் கேல் - சாமுவேல்ஸ் ஜோடி 2015ல் 372 ரன் குவித்ததே அதிகபட்சமாகும்.இமாம் உல் ஹக் 113 ரன் (122 பந்து, 8 பவுண்டரி) விளாசி ஆட்டமிழந்தார். பகார் ஸமான் 210 ரன் (156 பந்து, 24 பவுண்டரி, 4 சிக்சர்), ஆசிப் அலி 50 ரன்னுடன் (22 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமை பகார் ஸமானுக்கு கிடைத்துள்ளது. சயீத் அன்வர் 1997ல் இந்தியாவுக்கு எதிராக 194 ரன் விளாசி படைத்த சாதனையை பகார் நேற்று முறியடித்தார். ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தானின் அதிகபட்ச ஸ்கோரும் இது தான் (399). முன்னதாக, 2010 ஜூனில் வங்கதேசத்துக்கு எதிராக 385 ரன் எடுத்திருந்தது. அடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே 42.4 ஓவரில் 155 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. டிரிபானோ 44, சிகும்புரா 37, கேப்டன் மசகட்சா 22, மூர் 20 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். பகார் ஆட்ட நாயகன் விருது பெற்றார். பாகிஸ்தான் 4-0 என முன்னிலை வகிக்க, கடைசி போட்டி நாளை நடக்கிறது.

மூலக்கதை