தென் ஆப்ரிக்காவுடன் 2வது டெஸ்ட் இலங்கை அணி 9 விக்கெட்டுக்கு 277

தினகரன்  தினகரன்
தென் ஆப்ரிக்காவுடன் 2வது டெஸ்ட் இலங்கை அணி 9 விக்கெட்டுக்கு 277

கொழும்பு: தென் ஆப்ரிக்க அணியுடனான 2வது டெஸ்டில், இலங்கை முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 277 ரன் எடுத்துள்ளது. அபாரமாகப் பந்துவீசிய கேஷவ் மகராஜ் 8 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. காலே சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்த முதல் டெஸ்டில் இலங்கை அணி 278 ரன் வித்தியாசத்தில் வென்று 1-0 என மும்மிலை வகிக்க, 2வது டெஸ்ட் கொழும்பு சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாசில் வென்று பேட் செய்த இலங்கை அணியின் முதல் 3 வீரர்கள் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தனர்.கருணரத்னே 53, குணதிலகா 57, தனஞ்ஜெயா டி சில்வா 60 ரன் எடுத்து கேஷவ் மகராஜின் இடது கை சுழற்பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்து வந்த வீரர்களும் மகராஜின் சுழலை சமாளிக்க முடியாம் சொற்ப ரன்னில் அணிவகுத்தனர். குசால் 21, மேத்யூஸ் 10, டிக்வெல்லா 5, தில்ருவன் 17, கேப்டன் சுரங்க லக்மல் (0) ஆகியோர் மகராஜ் பந்துவீச்சில் பெவிலியன் திரும்ப, ரோஷன் சில்வா 22 ரன் எடுத்து ரபாடா வேகத்தில் கிளீன் போல்டானார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 277 ரன் எடுத்துள்ளது (86 ஓவர்). அகிலா தனஞ்ஜெயா 16, ரங்கனா ஹெராத் 5 ரன்னுடன் களத்தில் உள்ளனர். தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் மகராஜ் 32 ஓவரில் 6 மெய்டன் உட்பட 116 ரன் விட்டுக்கொடுத்து 8 விக்கெட் வீழ்த்தினார். இது அவரது சிறப்பான பந்துவீச்சாக அமைந்ததுடன் இலங்கை மண்ணில் வெளிநாட்டு ஸ்பின்னரின் அபார செயல்பாடாகவும் அமைந்தது. இன்று பரபரப்பான 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.

மூலக்கதை