இன்று 2வது டெஸ்ட் தொடக்கம் : இலங்கை சுழலை வீழ்த்துமா தென் ஆப்ரிக்கா?

தினகரன்  தினகரன்
இன்று 2வது டெஸ்ட் தொடக்கம் : இலங்கை சுழலை வீழ்த்துமா தென் ஆப்ரிக்கா?

கொழும்பு: இலங்கை, தென் ஆப்ரிக்கா இடையேயான 2வது டெஸ்ட் போட்டி கொழும்புவில் இன்று தொடங்குகிறது. இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. காலேவில் நடந்த முதல் போட்டியில் இலங்கை 278 ரன் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து 2வது டெஸ்ட் கொழும்புவில் இன்று தொடங்குகிறது. தென் ஆப்ரிக்கா இப்போட்டியில் வென்றால் மட்டுமே தொடரை இழக்காமல் இருக்க முடியும். முதல் டெஸ்டில் தென் ஆப்ரிக்க அணி இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர்களிடம் முழுமையாக சரணடைந்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 126, 2வது இன்னிங்சில் 73 ரன்னில் ஆல் அவுட்டானது. கேப்டன் டுபிளெஸ்சி முதல் இன்னிங்சில் 49 ரன் எடுத்தார். அவரைத் தவிர வேறெந்த பேட்ஸ்மேனும் இலங்கை சுழலை சமாளிக்கவில்லை. பந்துவீச்சில் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா மட்டுமே 2 இன்னிங்சில் சேர்த்து 7 விக்கெட் கைப்பற்றினார். எனவே, இம்முறையும் இலங்கையின் சுழலை தென் ஆப்ரிக்கா சமாளிக்குமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.இலங்கையை பொறுத்த வரையில் பேட்டிங்கில் கருணாரத்னே மட்டுமே சிறப்பாக செயல்பட்டுள்ளார். முதல் இன்னிங்சில் அவர் ஆட்டமிழக்காமல் 158 ரன் எடுத்துள்ளார். 2வது இன்னிங்சில் 60 ரன் விளாசினார். தென் ஆப்ரிக்காவின் ஒட்டுமொத்த ஸ்கோரை விட கருணாரத்னே மட்டுமே அதிக ரன் எடுத்துள்ளார். அவரைத் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் பெரிதாக சோபிக்கவில்லை. அதே நேரத்தில் பந்துவீச்சில் தில்ருவான் பெரேரா, ஹெராத், சண்டகான் ஆகிய சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். பெரேரா முதல் இன்னிங்சில் 6, 2வது இன்னிங்சில் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தியிருக்கிறார். இதனால் கொழும்புவிலும் இலங்கை சுழலே ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொழும்பு ஆடுகளமும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானது என்பது தென் ஆப்ரிக்காவுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தக் கூடியது. இங்கு இதற்கு முன் இரு அணிகளும் 5 டெஸ்டில் மோதி உள்ளது. இதில் 2ல் இலங்கையும், ஒன்றில் தென் ஆப்ரிக்காவும் வென்றுள்ளன. 2 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது.

மூலக்கதை