சமூக வலைதளங்களில் பரவிய தகவலால் பரபரப்பு : ஓய்வு பெறப் போகிறாரா டோனி?

தினகரன்  தினகரன்
சமூக வலைதளங்களில் பரவிய தகவலால் பரபரப்பு : ஓய்வு பெறப் போகிறாரா டோனி?

புதுடெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி முடிந்ததும், நடுவர்களிடமிருந்து டோனி பந்தை கேட்டு பெற்றதைத் தொடர்ந்து, அவர் கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இது குறித்து தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விளக்கம் அளித்துள்ளார்.இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இழந்துள்ளது. இதில் லீட்சில் நடந்த கடைசி போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து, வீரர்கள் பெவிலியன் திரும்பிக் கொண்டிருந்த சமயத்தில், கள நடுவர்களிடம் சென்ற மகேந்திர சிங் டோனி, பந்தை தருமாறு கேட்டுப் பெற்றார். இந்த வீடியோ சமூக வலைளதங்களில் கடந்த இரு தினங்களாக தீயாக பரவி வருகிறது. 2014ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் டிராவில் முடிந்ததும், இதே போல டோனி, நடுவர்களிடமிருந்து பந்தை கேட்டு பெற்றார். அதன்பின் சில நாட்கள் கழித்து, டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் தடாலடியாக அறிவித்தார். அதே போல, இம்முறை ஒட்டுமொத்த கிரிக்கெட்டுக்கும் டோனி முழுக்கு போடப் போகிறார் என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இது குறித்து ரசிகர்கள் பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்தனர். இந்நிலையில், இந்த விஷயத்திற்கு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறுகையில், ‘‘பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருணிடம் காண்பிப்பதற்காகவே டோனி பந்தை கேட்டு வாங்கினார். இது அரிதாக நடக்கும் விஷயமல்ல. போட்டியின் முடிவில் பந்தின் தேய்மானம், அதன் நிலை குறித்து அறிவதற்காக இவ்வாறு அவ்வப்போது செய்வது வழக்கமே. அதே போல, பந்துவீச்சு பயிற்சியாளரிடம் காண்பிப்பதற்காக டோனி பந்தை வாங்கினார். மற்றபடி அவர் ஓய்வு பெறப் போவதாக கூறுவதெல்லாம் முட்டாள்தனமானது. டோனி எங்கும் செல்ல மாட்டார்’’ என்றார்.‘பொறுத்துக் கொள்வார்’இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் டோனி 59 பந்தை சந்தித்து 37 ரன் எடுத்தார். 3வது போட்டியில் இக்கட்டான நேரத்தில் அணிக்கு வெற்றி தேடித்தருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரசிகர்களை ஏமாற்றினார். இதன் காரணமாகவும் சிலர் டோனியை விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர். டோனியின் ரன் வேகம் குறைந்து விட்டது, இளைஞர்களுக்கு வழிவிடலாம் என கூற ஆரம்பித்து விட்டனர். இது குறித்து ரவி சாஸ்திரி கூறுகையில், ‘‘டோனியின் வாழ்க்கையில் விமர்சனங்கள் புதிதில்லை. அவற்றை அவர் பொறுத்துக் கொள்வார். இதுபோன்ற விமர்சனங்கள் டோனியின் முக்கியத்துவத்தை ஒருபோதும் குறைத்துவிடாது’’ என்றார். இதற்கு முன், கேப்டன் கோஹ்லியும், ‘‘எப்போதுமே இக்கட்டான நேரத்தில் ரன் குவித்துக் கொண்டிக்க ய யாராலும் முடியாது’’ என டோனிக்கு ஆதரவாக கருத்து கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை