சச்சின் மகன் அர்ஜூன் ‘டக் அவுட்’

தினகரன்  தினகரன்
சச்சின் மகன் அர்ஜூன் ‘டக் அவுட்’

கொழும்பு: இலங்கை யு-19 அணிக்கு எதிராக தனது முதல் சர்வதேச போட்டியில் விளையாடி வரும் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் ‘டக் அவுட்’ ஆனார். கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் சச்சின். அவரது மகன் அர்ஜூன் டெண்டுல்கர், இந்திய யு-19 அணியில் இடம் பெற்று தனது முதல் சர்வதேச போட்டியில் விளையாடி வருகிறார். கொழும்புவில் நடக்கும் இந்தியா, இலங்கை யு-19 அணிகளுக்கு இடையேயான 4 நாள் போட்டியில் அர்ஜூன் களமிறங்கி உள்ளார். சச்சினின் மகன் என்பதால் அர்ஜூனின் செயல்பாடு அனைவராலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.போட்டியின் 3ம் நாளான நேற்று இந்திய யு-19 அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 525 ரன் குவித்திருந்த நிலையில் அர்ஜூன் களமிறங்கினார். 11 பந்துகளை சந்தித்த அர்ஜூன் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். 1989ல் பாகிஸ்தானுக்கு எதிராக தனது முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கிய சச்சின் டக் அவுட்டானது குறிப்பிடத்தக்கது. அதே போல, அர்ஜூனும் முதல் போட்டியில் டக் அவுட்டாகி உள்ளார்.ஆனாலும், இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஜூன் தனது முதல் விக்கெட்டை வெறும் 12 பந்தில் வீழ்த்தினார். முதல் இன்னிங்சில் அவர் 11 ஓவர் வீசி 33 ரன் கொடுத்து 1 விக்கெட் கைப்பற்றினார். முதலில் பேட் செய்த இலங்கை முதல் இன்னிங்சில் 244 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி 589 ரன் குவித்தது. 345 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை நேற்று தொடங்கிய இலங்கை அணி நேற்றைய 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்துள்ளது. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க அந்த அணி இன்னும் 168 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. 2வது இன்னிங்சில் 7 ஓவர் வீசிய அர்ஜூன் 18 ரன் கொடுத்து விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை. முதல் இன்னிங்சில் சிறப்பாக பந்துவீசிய இந்திய யு-19 அணியின் ஹர்ஷ் தியாகி 4 விக்கெட்டும், 2வது இன்னிங்சில் ஜங்க்ரா 3 விக்கெட்டும் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை