வன்முறையை தூண்டும் விதமான பொய், தவறான தகவலை நீக்க பேஸ்புக் முடிவு

தினகரன்  தினகரன்
வன்முறையை தூண்டும் விதமான பொய், தவறான தகவலை நீக்க பேஸ்புக் முடிவு

நியூயார்க்: இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வன்முறையை தூண்டும் விதமான பொய் செய்தி, தவறான தகவல்கள் பேஸ்புக்கில் இடம்பெற்றுள்ளதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தொடர்ந்து, அவற்றை நீக்கும் பணியில் பேஸ்புக் ஈடுபட்டுள்ளது. சமூகவலைதளமான பேஸ்புக்கில் முஸ்லிம் எதிர்ப்பு தகவல்கள் மற்றும் பொய் செய்திகள் இடம் பெறுவதாகவும் இதனால் மியான்மரில் சிறுபான்மையின ரோகிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதேபோல் இலங்கையிலும் பேஸ்புக் மூலம் பரப்பப்படும் பொய் செய்திகள் மற்றும் வெறுக்கத்தக்க செய்திகளால் மதம் சார்ந்த வன்முறைகள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகின. இந்தியாவில் பேஸ்புக்குக்கு சொந்தமான வாட்ஸ்அப் மூலம் ஏராளமான வதந்திகள் பரப்ப அனுமதிக்கப்படுவதாகவும், இதனால் அப்பாவி பொதுமக்கள் பலர் விசாரணையின்றி அடித்து கொல்லப்படுவதாகவும் புகார்கள் குவிந்தன. இதையடுத்து பொய் செய்திகள் மற்றும் தவறான தகவல்களை நீக்கும் பணியில் பேஸ்புக் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக பேஸ்புக் நிறுவனத்தின் பெண் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘‘பிறருக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலான தவறான தகவல்கள் பேஸ்புக்கில் இடம் பெற்றுள்ளதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக அறிகிறோம். இதனால் அவ்வகை செய்திகளை நீக்கும் வகையில் புதிய கொள்கையை உருவாக்கி வருகிறோம்’’ என்றார்.

மூலக்கதை