மத்திய அரசு உயர்த்த முடிவு பயிற்சியாளர்களின் சம்பளம் 2 லட்சம்

தினகரன்  தினகரன்
மத்திய அரசு உயர்த்த முடிவு பயிற்சியாளர்களின் சம்பளம் 2 லட்சம்

புதுடெல்லி: பல்வேறு விளையாட்டு பயிற்சியாளர்களின் சம்பளம் மாதம் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக மத்திய அரசு இரட்டிப்பாக்க இருப்பதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மக்களவையில் கேள்வி நேரத்தில் அவர் அளித்த பதிலில், ‘‘தற்போது விளையாட்டு பயிற்சியாளர்களுக்கு மாத சம்பளமாக ரூ.1 லட்சம் வழங்கப்பட்டு வகிறது. இதை 100 சதவீதம் உயர்த்தி, மாதம் ரூ.2 லட்சமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதே போல, வீரர்கள் பதக்கம் வெல்லும் போது, அவர்களின் வளர்ச்சிக்கு காரணமான ஆரம்பகால, இடைநிலை மற்றும் தற்போதைய பயிற்சியாளர்கள் என மூவருக்கும் பரிசுத் தொகை வழங்கப்படும். தற்போதுள்ள நடைமுறைப்படி ஆரம்பகால, இடைநிலை பயிற்சியாளர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்’’ என்றார்.சமீபத்தில் உலக யு20 சாம்பியன்ஷி–்ப் தடகள போட்டித் தொடரில் மகளிர் 400 மீ ஓட்டத்தில் தங்கம் வென்று  ஹிமா தாஸ் சாதனை படைத்தார். அவருக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த இந்திய தடகள சம்மேளனம், ‘‘மீடியாக்களிடம் ஹிமா தாஸ் தெளிவான ஆங்கில திறனுடன் பேசவில்லை’’ என கூறியது பெரும் சர்ச்சையானது. இது குறித்து, ரத்தோர் பதிலளிக்க வேண்டுமென காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷமிட்டனர். அதற்கு ரத்தோர், ‘‘முக்கிய பொறுப்புகளை தோளில் சுமக்கிறேன். எல்லா பிரச்னைக்கும் என்னால் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது’’ என கூறியதால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மூலக்கதை