பாதுகாப்பு படையினர் அதிரடி சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாதுகாப்பு படையினர் அதிரடி சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

பிஜாபூர்: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் இன்று 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சத்தீஸ்கர் மாநிலம், தன்டேவாடா மற்றும் பிஜாபூர் மாவட்டங்களின் எல்லையில் உள்ள திமினார் பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பாதுகாப்பு படையினர், மாவட்ட வன பாதுகாப்பு படை வீரர்கள் ஆகியோர் விரைந்து சென்று இன்று காலை நக்சலைட்டுகளை சுற்றி வளைத்தனர். வீரர்களை கண்டதும் நக்சலைட்டுகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

வீரர்களும் தக்க பதிலடி கொடுத்தனர். இருதரப்பினர் இடையே கடும் சண்டை நடந்த நிலையில், 7 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதில், 3 பேர் பெண்கள் ஆவர். கொல்லப்பட்ட நக்சலைட்டுகளிடம் இருந்து துப்பாக்கிகள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 தப்பியோடிய நக்சலைட்டுகளை தேடும் பணியில் வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

மன்பூர் பகுதியில் நேற்று நடந்த என்கவுன்டரில் பெண் நக்சலைட் ஒருவர் சுட்டுகொல்லப்பட்டார். அவரை பற்றிய தகவல் தெரிவிப்போருக்கு ரூ. 5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

நக்சலைட்டுகள் அதிகமுள்ள மாநிலங்களில் சத்தீஸ்கரும் ஒன்று. பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது, போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரை தாக்குவது போன்ற செயல்களில் நக்சலைட்டுகள் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களை ஒடுக்க சத்தீஸ்கர் அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

.

மூலக்கதை