சிறுமிகளை பலாத்காரம் செய்வோருக்கான மரண தண்டனை விதிக்கும் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சிறுமிகளை பலாத்காரம் செய்வோருக்கான மரண தண்டனை விதிக்கும் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி:  சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்ட திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.    நாடு முழுவதும் சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ், காஷ்மீரின் கத்துவா பகுதிகளில் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிறுமிகளை பலாத்காரம் செய்வோருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையிலான போக்ஸோ சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.

அந்தவகையில், 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்வோருக்கு மரண தண்டனை வழங்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட்டது.    

ஜனாதிபதி ஒப்புதலுடன் இந்த அவசர சட்டம் கடந்த ஏப்ரலில் அமலுக்கு வந்தது. இதன்படி, 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டால், அவ்வழக்கு 2 மாதங்களுக்குள் முடிக்கப்பட்டு குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.

பாலியல் பலாத்காரத்துக்கு குறைந்தபட்ச தண்டனையானது 7 ஆண்டில் இருந்து 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.   இந்நிலையில், இந்த சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.

இச்சட்டம் தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டு இரு சபைகளின் ஒப்புதல் கிடைத்ததும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

.

மூலக்கதை