பிரிக்ஸ் 2018 வாலிபால் : இந்திய அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு..

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
பிரிக்ஸ் 2018 வாலிபால் : இந்திய அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு..

தென்னாப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க் நகரில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் 2018 வாலிபால் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் கேப்டனாக மன்னார்குடி அருகே உள்ள எடமேலையூரைச் சேர்ந்த முத்துசாமி தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

23 வயதாகும் முத்துசாமி, எடமேலையூரில் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போது எடமேலையூர் வாலிபால் கழகத்தினரிடம் பயிற்சிக்கு சென்றார்,  அந்த பயிற்சியின் போது சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.  எனவே, முத்துசாமியை சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட ஊர்களில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதிகளில் சேர்த்து வாலிபால் பயிற்சி அளித்தனர். அப்போது, பள்ளி அளவில் நடைபெற்ற மாவட்ட, மாநில, தேசியப் போட்டிகளிலும் பங்கேற்ற வாலிபால் அணிகளில் முத்துசாமியும் பங்கேற்று, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், தனது அணியின் வெற்றிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். இதைத் தொடர்ந்து, பள்ளிப் படிப்பை முடித்த முத்துசாமி, பின்னர்  தனியார் கல்லூரியில் பி.ஏ இதழியல் படிப்பில் சேர்ந்து அந்தக் கல்லூரியின் வாலிபால் அணியிலும் சிறந்த வீரராக விளங்கியுள்ளார். எனவே, அதன்மூலம் பல்கலைக்கழக அளவில் நடைபெற்ற போட்டிகளிலும் தேசிய அளவில் இவர் பங்கேற்ற போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளார்.

இதுபோல, பல்வேறு போட்டிகளில் தன்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஆட்ட நாயகனாகவும் பரிசுபெற்றுள்ளர். முத்துசாமியின் சிறந்த விளையாட்டையும் திறமையையும் கண்ட பாரத் பெட்ரோலிய நிறுவனம், அவருக்கு வேலை வழங்கியதுடன், கேரள அணியிலும் விளையாட அனுமதித்தது. இந்த அணியிலும் தன்னுடைய திறமையை வெளிபடுத்திய முத்துசாமி, தற்போது கடந்த 8 மாதமாக இந்திய வாலிபால் அணியின் பயிற்சி முகாமில் பயிற்சி மேற்கொண்ட வீரர்களில் பிரிக்ஸ் 2018 வாலிபால் போட்டியில் விளையாடத் தேர்வுபெற்றதுடன், அந்த அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

மூலக்கதை