ஓரினச் சேர்க்கைக்கு அனுமதி உச்ச நீதிமன்றமே முடிவு எடுக்கலாம் : மத்திய அரசு திடீர் பல்டி

தினகரன்  தினகரன்
ஓரினச் சேர்க்கைக்கு அனுமதி உச்ச நீதிமன்றமே முடிவு எடுக்கலாம் : மத்திய அரசு திடீர் பல்டி

புதுடெல்லி ; ‘ஓரினச் சேர்க்கைக்கு அனுமதி வழங்குவது குறித்த முடிவை உச்ச நீதிமன்றமே எடுக்கலாம்’ என மத்திய அரசு தெரிவித்துள்ளது.  பல்வேறு உலக நாடுகளில் ஓரினச் சேர்க்கையாளர்கள் சேர்ந்து வாழ அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் இது தண்டைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது. இது, இந்திய தண்டனைச் சட்டம்-377ல் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த சட்டப்பிரிவை நீக்கக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ‘ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றமல்ல’ என கடந்த 2009ல் பரபரப்பு தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘இயற்கைக்கு மாறான எந்த உறவும் சட்ட விரோதமானது’ என தீர்ப்பளித்தது. இதனால், இந்திய தண்டனை சட்டம்-377 மீண்டும் உயிர் பெற்றது.இதற்கு பல்வேறு அமைப்பினரும், ஓரினச் சேர்க்கையாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரியும், 377வது சட்டப்பிரிவை நீக்கும்படியும் உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் நாரிமன், கன்வில்கர், சந்திரசூட், இந்து மல்கோத்ரா அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்த மனுக்களுக்கு பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சார்பில்  கூடுதல் தலைமை வழக்கறிஞர்  துஷார் மேத்தா ஆஜராகி, ‘‘இந்த பிரச்னையில் முடிவு எடுக்கும் பொறுப்பை நீதிபதிகளிடமே விட்டு விடுகிறோம். இந்திய தண்டனை சட்டம்-377வது சட்டப்பிரிவு வேண்டுமா? இல்லையா என்பது பற்றி உச்ச நீதிமன்றமே முடிவு எடுக்கலாம்’’ என்றார்.

மூலக்கதை