எஸ்சி, எஸ்டி.க்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு 7 நீதிபதி அமர்வுக்கு விசாரணை மாற்றம் : உச்ச நீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
எஸ்சி, எஸ்டி.க்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு 7 நீதிபதி அமர்வுக்கு விசாரணை மாற்றம் : உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி : அரசுப் பணிகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. அரசுப் பணிகளின் பதவி உயர்வில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு (எஸ்சி, எஸ்டி) இடஒதுக்கீடு வழங்கும் சட்டத் திருத்த மசோதா, மாநிலங்களவையில் கடந்த 2012ம் ஆண்டு செப்டம்பரில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 206 வாக்குகளும், எதிர்த்து 10 வாக்குகளும் பதிவாகின. பின்னர், மசோதாவின் 1, 2வது பிரிவுகளில் 2 திருத்தங்கள் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அரசுப் பணிகளில் இப்பிரிவு மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக கடந்த 1992 மற்றும் 2005, 2006ம் ஆண்டுகளில் உச்ச நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ேமலும், டெல்லி, மும்பை, பஞ்சாப், அரியானா மாநில உயர் நீதிமன்றங்களில் வேறுபட்ட தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால், இந்த இடஒதுக்கீடு விவகாரத்தில் தெளிவான வரையறையை உருவாக்க கோரியும், 2015 முதல் இன்று வரையில் இந்த இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கன்வில்கர், சந்திரசூட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், ‘‘இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும். இதற்காக, உடனடியாக 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வை நியமிக்க வேண்டும். ஏனெனில், இடஒதுக்கீடு தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்கள் பல விதமான உத்தரவுகளை வழங்கி இருப்பதால் ரயில்வே உட்பட பல்வேறு துறைகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது’’ என்றார். இதில், அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, இந்த வழக்கை 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார். மேலும்,  இந்த அமர்வில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து வழக்கு விசாரிக்கப்படும் என்றும் அறிவித்தார்.

மூலக்கதை