நடுத்தர மக்கள் பலரின் கார் கனவுகளை நனவாக்கிய நானோவின் பயணம் முடிகிறது : மலிவுக்கு இல்லை மவுசு வாங்க ஆளில்லாததால் சோகம்

தினகரன்  தினகரன்
நடுத்தர மக்கள் பலரின் கார் கனவுகளை நனவாக்கிய நானோவின் பயணம் முடிகிறது : மலிவுக்கு இல்லை மவுசு வாங்க ஆளில்லாததால் சோகம்

புதுடெல்லி : உலகின் மிக மலிவான நானோ கார், தனது பயணத்தை நிறுத்த வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஒரு லட்சம் ரூபாய்க்கு கார் என்ற அறிவிப்புடன் களம் இறக்கப்பட்டது நானோ கார். ரத்தன் டாடாவின் கனவு காராக 2008ம் ஆண்டு ஜனவரியில் டெல்லி ஆட்டோ கண்காட்சியில் அறிமுகமானது. டூவீலர்களே பெரிதும் சார்ந்திருந்த நடுத்தர மக்களுக்கு, சொந்த கார் என்பது கனவாகவே இருந்து வந்தது. அதிலும் புதிய கார் வாங்குவது சாத்தியமே இல்லை. இவர்களை குறிவைத்துதான் நானோ கார் சந்தையில் அறிமுகம் ஆனது. ஆட்டோ கண்காட்சியில் அறிமுகம் செய்து ஏறக்குறைய ஓராண்டுக்கு பிறகு, 2009ம் ஆண்டு மார்ச் மாதத்தில் விற்பனைக்கு வந்தது. ஒரு லட்சம் ரூபாய் என கூறப்பட்டாலும், இதன் அடிப்படை மாடல் ஷோரூம் விலையிலேயே ஒரு லட்சத்தை தாண்டியது. மாடலுக்கு ஏற்ப ரூ1.12 லட்சம் முதல் ரூ1.8 லட்சம் வரை ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டது. வந்த புதிதில் ஏராளமான முன்பதிவுகள் குவிந்தன. இப்படி துவக்கத்தில் வசீகரித்தஇந்த கார் தற்போது ஏறக்குறைய பயணத்தை நிறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. காரணம், வரவேற்பு இல்லாததுதான். பெயரளவுக்கு ஒரு லட்சம் ரூபாய் என இருந்தாலும், விற்பனை விலை மிக அதிகம். இதுவும் கார் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது. இதை ரத்தன் டாடாவும் ஒப்புக்கொண்டார். துவக்கத்தில், மேற்கு வங்க தொழிற்சாலையில் நடந்த போராட்டங்களால், குஜராத் தொழிற்சாலையில் நானோ கார்கள் உற்பத்தி தொடங்கியது. சமீபகாலமாக வரவேற்பு இல்லாததால் டாடா கார் உற்பத்தி கிடுகிடுவென சரிந்து  வந்தது. கடந்த ஜூன் மாதத்தில் ஒரே ஒரு கார் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய ஆண்டு ஜூன் மாதத்தில் 275 கார்கள் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், இந்த சரிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோல் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 25 கார்கள் ஏற்றுமதியான நிலையில், கடந்த மாதம் ஒரு கார் கூட ஏற்றுமதி செய்யப்படவில்லை. மூன்று கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. கார் என்பது வசதியானவர்களின் கவுரவ அடையாளமாகவே பார்க்கப்படுகிறது. அதோடு, ரூ5 லட்சத்தை தாண்டிய செடான் கார்களை நடுத்தர மக்களே கூட வாங்க தொடங்கி விட்டனர். மலிவான கார்களுக்கு மவுசு குறைந்துவிட்டது. இதே நிலை நீடித்தால் 2019ஐ தாண்டி நிலைக்குமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது என நிறுவன தரப்பில் கூறப்படுகிறது. ஏறக்குறைய தனது பயணத்தை நிறுத்திக்கொள்ளும் நிலைக்கு நானோ கார் வந்துவிட்டது.

மூலக்கதை