உலக அளவில் ஆபீஸ் அமைக்க அதிக செலவு 9வது இடத்தில் கனாட்பிளேஸ்

தினகரன்  தினகரன்
உலக அளவில் ஆபீஸ் அமைக்க அதிக செலவு 9வது இடத்தில் கனாட்பிளேஸ்

புதுடெல்லி : வணிக ரீதியிலான வர்த்தக அலுவலகம் அமைக்க அதிக செலவாகும் பகுதியாக தலைநகரின் கன்னாட்பிளேஸ் பகுதி உலகின் 9வது இடத்தை பிடித்து ஒரு இடம் முன்னேறியது. அமெரிக்காவின் கலிபோர்னியா நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வர்த்தகத் துறை ரியல் எஸ்டேட் அமைப்பான சிபிஆர்இக்கு, உலகின் 100க்கும் அதிகமான நாடுகளில் கிளைகள் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், வர்த்தக அலுவலகம் அமைப்பதற்கு அதிக செலவாகும் நகரங்கள் அல்லது நகரின் முக்கிய பகுதிகள் குறித்து சிபிஆர்இ சார்பில் தரவரிசைப் பட்டியில் வெளியிடப்படும். வாடகை, உள்ளூர் வரிகள், சேவை கட்டணங்கள் செலுத்துதல் போன்ற அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு சிபிஆர்இ தரவரிசைப் பட்டியலில் இடம் பெறும் நகர் அல்லது பகுதி, உலகளவில் வியாபார நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உடனடியாக அந்தஸ்து உயரப்பெறும்.அந்த வகையில் சிபிஆர்இ இப்போது வெளியிட்டுள்ள தரவரிசையில், வியாபார அலுவலகம் அமைக்க இடம் கிடைப்பது டெல்லியில் குதிரைக் கொம்பு என்றும் குறிப்பாக கன்னாட்பிளேஸ் பகுதியில் அலுவலகம் அமைத்திட அதிகமான தொகை செலவிட வேண்டும் எனவும் கூறியுள்ளது. சமீபத்திய தரவரிசைப் பட்டியலில் உலகில் 9ம் இடத்துக்கு முன்னேறி கன்னாட்பிளேஸ் சாதனை படைத்துள்ளது. கடந்தாண்டு 10 இடத்தில் இருந்த கன்னாட்பிளேஸ் தற்போது மேலும் ஒரு இடம் முன்னேறி 9ம் இடத்தை எட்டியுள்ளது. வியாபார நடவடிக்கைகளுக்காக கன்னாட்பிளேசில் ஒரு சதுர அடி சுமார் ரூ11,000 என கணிக்கப்பட்டு உள்ளது. 16ம் இடத்தில் இருந்த மும்பையின் குர்லா பகுதி தற்போது 26ம் இடத்துக்கு தள்ளப்பட்டது. அதுபோல இந்தியாவின் மிகப்பெரும் வர்த்தகப் பகுதி எனப்படும் மும்பையின் நாரிமன் முனையும் 30 இடத்தில் இருந்து 37 இடம் நோக்கி பின் சென்றுள்ளது. முதல் 5 இடங்களில் மத்திய ஹாங்காங், லண்டன், பீஜிங், ஹாங்காங் கவ்லூன் மற்றும் பீஜிங் சிபிடி ஆகியவை தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றன.

மூலக்கதை