மாநிலங்கள் தரவரிசையில் பின்தங்கியது எப்படி என விளக்கம் கேட்கிறது குஜராத் : தயாரிப்பு சரியில்லை என குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
மாநிலங்கள் தரவரிசையில் பின்தங்கியது எப்படி என விளக்கம் கேட்கிறது குஜராத் : தயாரிப்பு சரியில்லை என குற்றச்சாட்டு

புதுடெல்லி : தொழில் துவங்க ஏதுவான மாநிலங்களின் பட்டியலில் 5வது இடத்துக்கு தள்ளப்பட்டதால் குஜராத் அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசிடம் விளக்கம் கேட்டுள்ள குஜராத், பட்டியல் தயாரிப்பு நடைமுறை சரியில்லை என குற்றம் சாட்டியுள்ளது. இந்தியாவில் உள்ள மாநில, யூனியன் பிரதேச அரசுகள் மேற்கொண்ட தொழில் சீர்திருத்தங்களை அடிப்படையாக கொண்டு, உலக வங்கியும் தொழில்துறை கொள்கை மற்றும் ஊக்குவிப்புத் துறையும் இணைந்து ஆய்வு நடத்தின. அதன் அடிப்படையில், தொழில் துவங்க ஏதுவான மாநிலங்களின் பட்டியலை அவை வெளியிட்டுள்ளன. இந்த பட்டியலில் ஆந்திரா முதலிடம் பிடித்துள்ளது. தெலங்கானா, அரியானா, ஜார்கண்ட் மற்றும் குஜராத் மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. தமிழகம் 15வது இடத்திலும், தலைநகர் டெல்லி 23வது இடத்திலும் உள்ளன. இந்நிலையில், இந்த பட்டியலில் கடந்தாண்டு 3வது இடத்தை வகித்த குஜராத் அரசுக்கு, இப்போது 2 இடங்கள் பின்னோக்கி சென்றிருப்பது  அதிர்ச்சியை அளித்துள்ளது. இது எப்படி நடந்தது என்பது குறித்து மாநில தொழில் துறை கொள்கை மற்றும் ஊக்குவிப்பு துறையிடம் விளக்கம் கேட்டுள்ளது. இது குறித்து குஜராத் அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்த தர வரிசைக்கும், இந்த பட்டியல் தயாரிக்கப்பட்ட நடைமுறைக்கும் குஜராத் கண்டனம் தெரிவித்துள்ளது. அரியானாவை விட அதிக மதிப்பெண்களை குஜராத் பெற்றுள்ளது. அரியானா 82.9 சதவீதம் பெற்றுள்ள நிலையில், குஜராத் 83.64 சதவீத புள்ளிகளை பெற்றுள்ளது. இருந்தாலும், அரியானாவை விட குஜராத் 2 இடங்கள் பின் தங்கியது பற்றி தொழில்துறை கொள்கை மற்றும் ஊக்குவிப்புத் துறையிடம் விளக்கம் கேட்டுள்ளோம்” என்றார். இந்த ஆய்வில் கடந்த 2015ல் முதல் இடத்தையும், 2016ல் 3வது இடத்தையும் 2017ல் 5வது இடத்தையும் குஜராத் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை